Home இந்தியா திருநெல்வேலி தொகுதியில் முந்துகிறாரா நயினார் நாகேந்திரன்?

திருநெல்வேலி தொகுதியில் முந்துகிறாரா நயினார் நாகேந்திரன்?

353
0
SHARE
Ad
நயினார் நாகேந்திரன்

சென்னை : தமிழ் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதி நெருங்கி வரும் வேளையில், திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னணி வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெல்லை என சுருக்கமாக அழைக்கப்படும் திருநெல்வேலி, அல்வாவுக்கு புகழ்பெற்ற ஊர். இருட்டுக் கடை அல்வா என்பது இந்த ஊரில் மட்டும் கிடைக்கக் கூடிய விசேஷம். நடைபெறும் தேர்தலில் நெல்லை வாக்காளர்கள் யாருக்கு தரப் போகிறார்கள் அல்வா என்பதுதான் இப்போது தமிழ் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் அரசியல் விவாதம்!

அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தவர் நயினார் நாகேந்திரன். ஜெயலலிதாவால் முன்னணிக்குக் கொண்டு வரப்பட்டவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பாஜகவில் இணைந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இப்போது அவருக்கே மீண்டும் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்கியிருக்கிறது பாஜக.

#TamilSchoolmychoice

திமுக கூட்டணியில் இங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் ராபர்ட் புரூஸ் என்ற வழக்கறிஞர். இவரோ கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதனால் வெளியூர் வேட்பாளரைக் களமிறக்கியிருக்கிறார்களே என உள்ளூர் காங்கிரஸ்-திமுகவினரிடையே அதிருப்தி.

பொதுவாக திமுக நேரடியாகப் போட்டியிடாத தொகுதிகளில் திமுகவினர் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக தீவிரமாகப் பணியாற்றவில்லை என பல தொகுதிகளில் புகார்கள். நெல்லையும் அவற்றில் ஒன்று.

அதிமுக சார்பில் இங்கு போட்டியிடுகிறார் ஜான்சி ராணி. முதலில் சிம்லா முத்துசோழன் என்பவர் அறிவிக்கப்பட்டு, பின்னர் அவர் மாற்றப்பட்டு ஜான்சி ராணி வேட்பாளரானார். இந்த மாற்றத்தினால் ஏற்பட்ட குழப்பம் ஒருபுறமிருக்க – நயினார் நாகேந்திரன் அளவுக்கு ஜான்சி ராணி பிரபலம் இல்லை என்பது அதிமுகவின் பின்னடைவுக்கான காரணங்களில் ஒன்று.

நயினார் நாகேந்திரன் முன்னாள் அதிமுககாரர் என்பதால் பழைய அதிமுக நண்பர்களும் அவருக்கு பணியாற்றுவதாகத் தகவல். நாகேந்திரனின் சாதி வாக்குகளும் நெல்லையில் அதிகம் என்பதால் – உள்ளூர்காரர் – ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் – என்ற முறையில் போட்டியில் அவரே முந்துகிறார் என முதற்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன.