கோலாலம்பூர்: 2025 வரவு செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்டில்) மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றத்தில் அரசாங்க பின்வரிசை உறுப்பினரும் மித்ரா தலைவருமான பி.பிரபாகரன் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
பத்து நாடாளுமன்றத் தொகுதிக்கான பிகேஆர்-பக்காத்தான் ஹாரப்பான் உறுப்பினருமான பி. பிரபாகரன் கூறுகையில், மலேசிய இந்தியர்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு இந்த ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்றார்.
“100 மில்லியன் என்பது உச்சவரம்பாக கருதப்படக்கூடாது, மாறாக அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கான தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும்,” என்று மித்ராவின் சிறப்பு பணிக்குழுவின் தலைவராகவும் இருக்கும் பிரபாகரன் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கான விவாதத்தின் போது தெரிவித்தார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக மித்ராவுக்கு ஒதுக்கப்படும் தொகையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை என்றும் பிரபாகரன் சுட்டிக்காட்டினார்.
“இந்திய சமூகத்திற்கு உண்மையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு ஆதரவளிக்க வரவு செலவுத் திட்டத்தில் நிதியை அதிகரிக்க அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.”
இந்திய சமூகத்திற்கான முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்கு அரசாங்கம் ஏன் முன்னுரிமை அளிக்கவில்லை என்றும் பிரபாகரன் கேள்வி எழுப்பினார்.
தமிழ்ப் பள்ளிகளில் போதுமான பாலர் பள்ளி வசதிகள் இல்லாததால் தனியார் பாலர் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய மாணவர்களுக்கு மானியம் வழங்க மித்ராவை அவர்கள் தற்போது நம்பியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் துறையின் கீழ் இயங்கும் மித்ரா, மாணவர்களுக்கு மானியம் வழங்க ஆண்டுதோறும் 10 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்குகிறது.
“இந்தப் பொறுப்பு கல்வி அமைச்சகத்திடம் இருக்க வேண்டும்,” என்றார் பிரபாகரன்.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, 528 தமிழ்ப் பள்ளிகளில் 271 பள்ளிகளில் மட்டுமே பாலர் பள்ளி வசதிகள் உள்ளதாகவும் அவர் தெரியப்படுத்தினார்.
பல பள்ளிகளால் ஒரு பாலர்பள்ளி வகுப்பை மட்டுமே நடத்த முடிகிறது என்றார் பிரபாகரன்.
“இந்தப் பள்ளிகளில் 65% விழுக்காட்டுப் பள்ளிகள் ஒரே வகுப்புடன் இயங்குவதால், ஆயிரக்கணக்கான இந்திய குழந்தைகளின் ஆரம்பக் கல்வி வாய்ப்பை நாம் கட்டுப்படுத்துகிறோம்” என்றும் பிரபாகரன் தனது நாடாளுமன்ற உரையில் சுட்டிக் காட்டினார்.