Home நாடு ‘மித்ரா இனி புதிய திசையில் செல்லும்’ – அமைச்சர் அறிவிப்பு

‘மித்ரா இனி புதிய திசையில் செல்லும்’ – அமைச்சர் அறிவிப்பு

204
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : மித்ரா என்னும் அரசாங்கத்தின் இந்திய சமூக உருமாற்ற பிரிவு இனி எந்த திசையில் தனது இலக்கைக் கொண்டு பயணிக்க வேண்டும் என்பது குறித்து தீர்மானிக்க பட்டறைகள் நடத்தப்படும் என தேசிய ஒற்றுமை துறை அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய சமூகத்திற்கான நடவடிக்கை திட்டத்தை ஒருங்கிணைத்து மித்ரா செயல்படும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

மித்ரா எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்க பட்டறைகள் நடத்துவது வீண் செலவு என்றும் இந்திய சமுதாயத்தை முட்டாளாக்கும் செயல் என்றும் மக்கள் சக்தியின் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர் எஸ் தனேந்திரன் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஆரோன் இந்த விவரங்களை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நஜிப் துன் ரசாக் தன் பதவிக் காலத்தில் அறிமுகப்படுத்திய இந்தியர் ப்ளூ பிரிண்ட் என்னும் இந்திய சமூகத்திற்கான பத்தாண்டு கால வியூக பேருந்து திட்ட வரைவில் தேவைப்படும் அனைத்து தரவுகளும் முழுமையாக இருப்பதாக தனேந்திரன் கூறியிருந்தார்.

“மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை மித்ரா எங்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அதனை எந்தத் திசையில் செலுத்துவது என்பது குறித்து முறையான இலக்குகள் இருக்க வேண்டுமென நாங்கள் முடிவு செய்து இருக்கின்றோம். மீண்டும் பழைய பாதையிலேயே மித்ரா செல்வதை நாங்கள் விரும்பவில்லை” எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

“கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியர் ப்ளூ பிரிண்ட் எனும் ஆவணத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஏற்றுக்கொள்கிறோம். அதில் இந்திய சமுதாயம் குறித்த விவரங்கள் மேலோட்டமாகவே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மித்ரா, இந்திய சமுதாயத்தின் எல்லாப் பிரச்சனைகளையும்  தீர்ப்பதற்கான அமைப்பு அல்ல. காரணம் மற்ற அமைப்புகளும் அரசு இலாகாக்களும் சமூகம், பொருளாதாரம், சுகாதாரம், கல்வி போன்ற பல அம்சங்களில் ஈடுபட்டு இருக்கின்றன” என்றும் அவர் சுட்டிக் காட்டினார்

“இந்திய சமுதாயத்திற்கான ஒரு சிறிய அமைப்பாக மித்ரா திகழ்வதால் அது செல்ல வேண்டிய பாதை நன்கு திட்டமிட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் செல்ல வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” எனவும் ஆரோன் குறிப்பிட்டார்.

புத்ரா ஜெயாவில் ‘மித்ரா எந்த திசையில் செல்ல வேண்டும்’ என்பது குறித்து விவாதிக்க இன்று  தொடங்கி நடத்தப்படும் இரண்டு நாள் பட்டறையைத் தொடக்கி வைத்த பின்னர் ஆரோன் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

அரசாங்க இலாகாக்கள், தனியார் நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள், சமய இயக்கங்கள்,  இளைஞர் அமைப்புகள் ஆகியவற்றைச் சார்ந்த பிரதிநிதிகள் இன்று தொடங்கிய மித்ராவின் இரண்டு நாள் பட்டறையில் கலந்து கொள்கின்றனர்.

இதன் தொடர்பில் அண்மையில் இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன் கருத்து பரிமாற்றமும் நடத்தப்பட்டது.

மித்ராவுக்கான இரண்டு நாள் பட்டறையில் இரண்டாவது நாளில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது மித்ரா குறித்த முழுமையான,  தெளிவான, புரிந்துணர்வு தனக்கு இல்லை என அமைச்சர் ஆரோன் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து மித்ரா குறித்து எந்தவித புரிந்துணர்வும் இல்லாத அமைச்சர் ஒருவரின் கீழ் அந்த அமைப்பு நிர்வகிக்கப்படுவது குறித்து இந்திய அரசு சாரா இயக்கங்கள் கடுமையாகச் சாடியிருந்தன.