Home நாடு 32 ஆண்டுகளில் துணைத் தலைவரை நீக்காத சாமிவேலு – ஒரே நாளில் 15 பேரை நீக்கிய...

32 ஆண்டுகளில் துணைத் தலைவரை நீக்காத சாமிவேலு – ஒரே நாளில் 15 பேரை நீக்கிய பழனிவேலு – ஓர் ஒப்பீடு!

952
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 19 – மஇகா மூத்த தலைவர்களுக்கும் கட்சியின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியத்தின் தீவிர ஆதரவாளர்களுக்கும் அந்த நாள் என்றும் மறக்க முடியாத நாளாக என்றும் நீங்காமல் நினைவில் நிலைத்திருக்கும்.

அதுதான் 26 மே 1981ஆம் ஆண்டு!

Tansri_Manickavasagam1979ஆம் ஆண்டில் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் (படம்) அகால மரணமடைந்த பிறகு, இடைக்காலத் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றார் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு. அப்போது கட்சியின் மூன்று உதவித் தலைவர்களில் அதிக வாக்குகளில் வெற்றி பெற்ற முதலாவது உதவித் தலைவராகச் சுப்ராவும், இரண்டாவது உதவித் தலைவராக டத்தோ கு.பத்மநாபனும் இருந்தனர்.

#TamilSchoolmychoice

சாமிவேலு இடைக்காலத் தலைவராகி விட்டதால், அவருக்கு அடுத்த நிலையில் அதிக ஆதரவு பெற்ற தலைவராக இருந்த சுப்ராவைக் கட்சியின் தேசியத் துணைத் தலைவராகச் சாமிவேலு நியமிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் நிகழாமல் போக, சாமிவேலுவுக்கும் சுப்ராவுக்கும் இடையிலான அரசியல் மோதல் அப்போது உச்ச கட்டத்தை அடைந்தது.

சுப்ராவைக் கட்சியிலிருந்து வெளியேற்ற சாமிவேலு தீர்மானம்

Tan Sri Subra

முன்னாள் மஇகா தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சுப்ரா

அதன் தொடர்ச்சியாக 26 மே 1981ஆம் ஆண்டில் சாமிவேலு கூட்டிய மத்திய செயலவைக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டது.

கட்சி நலன்களுக்கு எதிராக நடந்து கொண்டார் என்பதால் சுப்ராவைக் கட்சியிலிருந்தே நிரந்தரமாக நீக்க வேண்டும் (Expel)  என்பதுதான் அந்தத் தீர்மானம்.

மத்தியச் செயலவை இரண்டாகப் பிளவுபட்டு, கடுமையான வாதங்கள் வெடித்த வேளையில், மஇகா தலைமையகத்திற்கு வெளியே சுப்ரா ஆதரவாளர்கள் ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் ஒன்று திரண்டிருந்தனர். அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் காவல் துறையினரில் பாதுகாப்புப் படைகளும் குவிக்கப்பட்டிருந்தன.

சாமிவேலு – சுப்ரா சமரசப் பேச்சு

மத்தியச் செயலவை விவாதங்கள் கடுமையான – உச்சகட்ட மோதலை அடைந்த போது, “சிறிது நேரம் இடைவேளை விடுகின்றேன்” என்று கூறிவிட்டு, மஇகா தலைமையகத்தில் உள்ள தனது அறைக்குச் சென்றார் சாமிவேலு.

Samy-Subra

அப்போது அங்கு சென்று யாரும் எதிர்பாராத விதமாக, சாமிவேலுவின் அறைக்குள் நுழைந்தார் சுப்ரா. அறையில் இருவர் மட்டுமே தனியாக இருந்தனர்.

மற்ற மஇகா தலைவர்கள் அறைக்கு வெளியே இருந்து என்ன நடக்கின்றது என்று ஆவலுடன் காத்திருக்க, சாமிவேலு சுப்ரா இடையிலான சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.

என்ன நடந்தது என்பது இருவருக்குமே வெளிச்சம். அதைச் சொல்லும் நிலையில் இன்று இருப்பவர் சாமிவேலு மட்டுமே! உயிரோடு இருந்தும் சொல்ல முடியாத உடல்நலச் சூழலில் சுப்ரா இன்றைக்கு இருக்கின்றார்.

இருப்பினும், பின்னர் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட தகவல்படி, இருவரும் தங்களுக்கிடையிலான அரசியல் போராட்டத்தின் உச்சகட்ட மோதலில், உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் விட்டனர் என்பதும் பின்னர் மனம் விட்டு பேசினர் என்பதும் வெளியே கசிந்தது.

சுப்ராவை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் திரும்பப் பெறப்பட்டது  

20 நிமிடங்களுக்குப் பிறகு சாமிவேலுவும் சுப்ராவும் அறையை விட்டு வெளியே வந்து நேரடியாக மீண்டும் மத்திய செயலவைக் கூட்டத்திற்குச் சென்றனர்.

“நானும் சுப்ராவும் கட்சிக்காக, சமுதாயத்திற்காக இணைந்து பணியாற்ற தீர்மானித்திருக்கின்றோம். அவரையே அடுத்த துணைத் தலைவராக முன்மொழிவேன். அவரை கட்சியிலிருந்து வெளியேற்றும் தீர்மானத்தை திரும்பப் பெறுகின்றேன்” என்று அறிவித்தார் சாமிவேலு.

அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட, வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனர்.

அடுத்த சில மாதங்களில் சுப்ரா தேசியத் துணைத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மீண்டும் மீண்டும் போராட்டம் – ஆனால் கட்சியிலிருந்து நீக்கவில்லை

subra-and-palaniஇருப்பினும் அடுத்த 30 ஆண்டுகளில் சாமிவேலு சுப்ரா இருவருக்கும் இடையில் எத்தனையோ போராட்டங்கள் மீண்டும் மீண்டும் வெடித்தன.

1989ஆம் ஆண்டில் தேசியத் தலைவர் பதவிக்கே இருவரும் போட்டியிட்டனர். 1990 பொதுத் தேர்தலிலும், 2004 பொதுத் தேர்தலிலும் துணைத் தலைவராக இருந்த சுப்ராவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சாமிவேலுவால் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

2006ஆம் ஆண்டிலும், 2009ஆம் ஆண்டிலும் துணைத் தலைவர் தேர்தலுக்கு பழனிவேல் போட்டியிட்டு சுப்ராவைத் தோற்கடிக்க அதற்கு சாமிவேலு பகிரங்க ஆதரவு கொடுத்தார்.

ஆனாலும் சாமிவேலு நினைத்திருந்தால் இத்தனை போராட்டங்கள் நடத்துவதற்கு பதில் ஒரே கடிதத்தில் சுப்ராவை கட்சியிலிருந்தே நீக்கியிருக்க முடியும். அதற்கான, அதிகார பலமும், கட்சியில் ஆதரவு பலமும் அவர் வசம் இருந்தது.

ஆனாலும், அரசியல் போராட்டத்தில் கண்ணியம் காத்த சாமிவேலு இறுதி வரை சுப்ராவைக் கட்சியிலிருந்து நீக்கவேயில்லை. அரசியல் களத்தில்தான் தனது போராட்டத்தை நடத்தினார்.

ஒவ்வொரு கட்டப் போராட்டத்திலும், இருவரும் மக்கள் மன்றத்தில் தங்களின் தரப்பு வாதப் பிரதிவாதங்களை முன்வைத்து ஆதரவு கோரினர்.

மோதல்களின் உச்சகட்டத்தில் கட்சி நலனுக்காக சமரசம்

மோதல்கள் உச்ச  கட்டத்தை அடைந்து அதனால் கட்சி பிளவுபடும் சூழ்நிலை வந்தபோது, இருவரும் மனம் விட்டுப் பேசிச் சமரசம் கண்டனர். இது 1990இலும் பின்னர் 2008இலும் நடந்தது.

32 ஆண்டுகால அரசியலில், சர்வாதிகாரி என்று பேர்வாங்கிய சாமிவேலு – எத்தனையோ கடுமையான அரசியல் போராட்டங்களுக்கிடையிலும், வலுவான எதிர்ப்புகளுக்கிடையிலும் – ஒவ்வொரு மாதமும் மத்திய செயலவைக் கூட்டத்தைக் கூட்டுவார். ஒருமுறை கூட கட்சி விவகாரம் சங்கப் பதிவகத்திற்குச் சென்றதில்லை. தனக்கு எதிரான வழக்குகளைத்தான் சாமிவேலு நீதிமன்றத்தில் சந்தித்தாரே தவிர, தனது அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்த,  அவர் நீதிமன்றத்தை நாடியதே இல்லை.

இவையெல்லாம் சாமிவேலு என்ற தனிமனிதனுக்கு இத்தனை ஆண்டுகள் கழித்து சூட்டப்படும் பாராட்டு மொழிகளல்ல!

Samy Vellu-Palanivel

மாறாக, கடந்த காலங்களில் எத்தகைய தலைமைத்துவ பண்பு பின்பற்றப்பட்டது, ஒரு தலைவன் எத்தனையோ அரசியல் போராட்டங்களுக்கு இடையிலும் எவ்வாறு கட்சியை வழி நடத்த வேண்டும் என்பதை ஓர் ஒப்பீடாக க் காட்டத்தான் – இந்த கடந்த கால சம்பவங்களெல்லாம் இங்கே  சுட்டிக் காட்டப்பட்டுள்ளன!

ஆனால், அந்தச் சாமிவேலுவைப் பல முனைகளிலும் குறை கூறும் பழனிவேலுவோ, ஒரே நாளில் மஇகா துணைத் தலைவர், உதவித் தலைவர் உட்பட 15 மத்திய செயலவை உறுப்பினர்களை நீக்கி விட்டதாகத் தனது தலைமைத்துவ அதிகாரத்தையே கேலிக் கூத்தாக்கி இருக்கின்றார்.

-இரா.முத்தரசன்