Home நாடு மஇகா: கிளைத் தலைவர்களை சந்தித்து கட்சி பிரச்சனைகள் குறித்து சுப்ரா விளக்கம்!

மஇகா: கிளைத் தலைவர்களை சந்தித்து கட்சி பிரச்சனைகள் குறித்து சுப்ரா விளக்கம்!

613
0
SHARE
Ad

s-subramaniam1-020713_484_321_100கோலாலம்பூர், டிசம்பர் 24 – சங்கப் பதிவதிகாரியின் மறு தேர்தல் உத்தரவு, சர்ச்சைக்குரிய மத்திய செயலவை – இவற்றுக்கிடையில், மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கட்சியின் அடிமட்ட தளங்களாக உள்ள கிளைத் தலைவர்களைச் சந்தித்து கட்சிப் பிரச்சனைகள் குறித்து விளக்கம் தரத் தொடங்கியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) பினாங்கில் தனது அமைச்சின்  நிகழ்வு ஒன்றிற்காக வருகை தந்தவர் அன்று மாலையே பினாங்கில் உள்ள கிளைத் தலைவர்களுக்கு இரவு விருந்து வழங்கி அவர்களுடன் சந்திப்பு நடத்தினார்.

இந்த விருந்தில், பினாங்கு மாநில மஇகா தொடர்புக் குழுத் தலைவரும்,  மஇகா தேசியத் தலைவர் பழனிவேலுவின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்படுபவருமான எம்.கருப்பண்ணன் கலந்து கொள்ளவில்லை.

#TamilSchoolmychoice

இந்த விருந்துபசரிப்பு கூட்டத்தில் டாக்டர் சுப்ரா, வெளிப்படையாக கட்சியின் விவகாரங்களைக் கட்சியின் கிளைத் தலைவர்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஏற்கனவே கட்சியில் அவரது ஆதிக்கமும், செல்வாக்கும் கூடி வருகின்ற நிலையில் அவரது இத்தகைய கிளைத் தலைவர்களை நேரடியாச் சந்திக்கும் அணுகுமுறை, அடிமட்ட மஇகா தலைவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளதாகவும், இதுபோன்ற சந்திப்புகள்தான் தற்போது மஇகாவுக்குத் தேவை என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

டாக்டர் சுப்ராவின் உரை 

G.Palanivelபினாங்கில் உரையாற்றிய சுப்ரா, கட்சியில் சில பிரச்சினைகள் நிலவி வருவதை மறுப்பதைக் காட்டிலும் அவை தொடர்பில் உடனடியாக மற்றும் ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகள் மேற்கொள்வதே தற்போதைய தேவை என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இல்லையேல் அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் மஇகா மேலும் பலவீனம் அடையும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மஇகாவில் உட்கட்சிப் பிரச்சினைகள் ஏதும் இல்லை என கட்சித் தலைமை இனிமேலும் மறுத்துக் கொண்டிருப்பது சரியல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், “பிரச்சனை இல்லையெனில் கட்சித் தேர்தல் தொடர்பாக சிலர் சங்கப் பதிவதிகாரியை அணுகியது ஏன்? பிரச்சனைகள் ஏதும் இல்லை எனில், கட்சித் தலைமையிடம் சங்கப் பதிவதிகாரி ஏன் கடிதம் கொடுக்க வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“எனவே பிரச்சினைகள் இல்லை என மறுக்க வேண்டாம். பிரச்சனைகள் இருப்பதை ஒப்புக்கொண்டு அதற்கான முழுமையான தீர்வுகளைக் காண வேண்டும். அப்போதுதான் கட்சி முன்னோக்கிச் செல்லும். அரசியல் சிக்கல்களுடனும், கோஷ்டி பூசல்களுடனும், உட்கட்சி மோதல்களுடனும் கட்சி நீண்ட நாள் பயணப்பட முடியாது. பிரச்சினைகளை விரைவில் அடையாளம் கண்டு தீர்வும் காணப்பட்டால்தான் நாம் வேகமாக முன்னோக்கிச் செல்ல முடியும்” என்றும் சுப்ரா அந்த பினாங்கு கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குரல் கொடுக்கத் தொடங்கும் சுப்ரா

MIC-logoபொதுவாக கட்சிப் பிரச்சனைகள் குறித்தோ, தலைமைத்துவம் குறித்தோ பகிரங்கமாக கூட்டத்திலோ, பத்திரிக்கையாளர்கள் மத்தியிலோ பேசாமல் ஒதுங்கிக் கொண்டு, அமைதி காக்கும் டாக்டர் சுப்ரா, அண்மையக் காலமாக கட்சியில் நடந்து வரும் சம்பவங்கள் குறித்து அதிருப்தி கொண்டிருக்கின்றார் என்றும் அதன் வெளிப்பாடுதான் பினாங்கில் அவர் ஆற்றிய உரை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பினாங்கில் பகிரங்கமாக  அவர் தெரிவித்த விவகாரங்கள், பேசிய முறை ஆகியவற்றிலிருந்து,  சுப்ரா, இனிமேல் கட்சிப் பிரச்சனைகளை நேரடியாக கிளைத் தலைவர்களுக்கு கொண்டு சென்று அவர்களின் மத்தியில் விவாதிக்கும் அணுகுமுறையைத் தொடங்கியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் இது ஒரு நல்ல முன்னுதாரண முயற்சி என்றும் மஇகா பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

“கடந்த 2008 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் கட்சி பலவீனம் அடைந்துள்ளது. எதிர்வரும் 2018க்குள் நாம் ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால் பெரிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். மத்திய செயலவைக் கூட்டத்தின்போது எனது இந்தக் கருத்துக்களை தெளிவாகச் சொல்லிவிட்டேன்,” என்றும் இந்த பினாங்கு கூட்டத்தில் சுப்ரா கூறியிருக்கின்றார்.

அவர் குறிப்பிடும் காலகட்டத்திலும், இப்போதும், பழனிவேலுதான் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கின்றார்.

அனைத்து உட்கட்சி பிரச்சினைகளுக்கும் நல்லவிதமாகத் தீர்வு காண வேண்டும் என மத்திய செயலவைக் கூட்டத்தில் தாம் வலியுறுத்தி இருப்பதாகக் குறிப்பிட்ட சுப்ரா, கட்சியில் உள்ள அதிருப்தி குழுவினர் அனைவரையும் அழைத்து வைத்து கட்சித் தலைமை பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

கட்சியில் கணிசமான தலைவர்கள், ஒரு குழுவாக இணைந்து, மறு தேர்தலுக்காகவும், கட்சியில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்பது போன்ற மற்ற பிரச்சனைகளுக்காகவும் போராட்டம் நடத்தி வரும் வேளையில் சுப்ராவும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற ஆதங்கமும், எதிர்பார்ப்பும் கட்சி அடிமட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வருகின்றது.

அத்தகைய கட்சி அடிமட்ட உறுப்பினர்களின் – தலைவர்களின் எதிர்பார்ப்பை – பூர்த்தி செய்ய டாக்டர் சுப்ரா தற்போது முன்வந்துள்ளார், அதற்காக குரல் கொடுக்கவும் தொடங்கி விட்டார் என்பதையே,

அவரது பினாங்கு மஇகா கிளைத் தலைவர்களிடையே ஆற்றிய உரை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.