புதுடில்லி, டிசம்பர் 24 – பிரதமர் நரேந்திர மோடியின் அலை ஒருபுறம் உள்நாட்டில் இன்னும் வீசிக் கொண்டிருக்க – அதே வேளையில் அவரது, அனைத்துலக ரீதியான நடவடிக்கைகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்து விட- தற்போது ஒவ்வொரு இந்திய மாநிலங்களாக பாரதீய ஜனதா கட்சி (பாஜக) வசம் வீழ்ந்து வருகின்றது.
போதாக் குறைக்கு, பாஜகவின் வியூக மூளையாக செயல்படும் அமித் ஷா, எந்தவொரு அமைச்சுப் பொறுப்பையும் வகிக்காமல், பாஜகவின் கட்சித் தலைமைப் பொறுப்பை மட்டும் ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு மாநிலமாக சென்று தேர்தல் திட்டம் வகுத்து வெற்றிக் கொடி நாட்டி வருகின்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 42 தொகுதிகளை வென்று பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது.
காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளை மட்டுமே வென்று இந்த மாநிலத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.
இரண்டாவது பெரிய கட்சியாக ஜேஎம்எம் எனப்படும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மொத்தம் 19 தொகுதிகளை வென்றுள்ளது.
மற்றொரு கட்சியான ஜேவிஎம் எனப்படும் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 8 தொகுதிகளை வென்றுள்ள நிலையில் இதர கட்சிகள் 6 தொகுதிகளை வென்றுள்ளன.
ஜார்க்கண்ட் முன்பு பீகார் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த பிரதேசமாகும். 2000ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் பீகாரின் தென் பகுதியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.
பரந்த காடுகளையும் பூர்வ குடி மக்களையும் உள்ளடக்கிய இந்த மாநிலம், ஏராளமான கனிம வளங்களையும் கொண்ட மாநிலமாகும்.