எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து, 13 எம்.எல்.ஏக்கள், மூன்று நாட்களுக்கு முன் விலகினர். இவர்களை தனிக்குழுவாக, அங்கீகரித்து, பீகார் சட்டசபை சபாநாயகர் சவுத்ரி அறிவித்தார். அவர்களை, கட்சி தாவல் தடைச்சட்டப்படி, பதவி நீக்கம் செய்ய வேண்டும் என லாலு வலியுறுத்தி வந்த நிலையில், சபாநாயகர், மாறான நிலைப்பாட்டை எடுத்ததால் லாலு கோபமடைந்தார்.
பின்பு பத்திரிக்கை நிருபர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், பீகார் சட்டசபை சபாநாயகர், நடவடிக்கைகள் அனைத்துமே புதிராக உள்ளது. ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் போன உதய் நாராயணன் சவுத்திரி, தன் உதவியாளராக, நக்சல் தலைவர் முரளி யாதவை, அரசு செலவில் அழைத்து சென்றார். மேலும், எங்கள் கட்சி, எம்.பி. கயா, ராஜேஷ் குமார் கொலை வழக்கில், அவர் சம்பந்தப்பட்டுள்ளார்.
இதற்கான ஆவணங்களை எடுத்து வரும்படி, ராஜேஷ் குமாரின் உறவினரை அழைத்துள்ளேன். எங்கள் கட்சியில் இருந்து விலகிய, 13 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும். அதைவிடுத்து, தனிக்குழுவாக அங்கீகரிப்பது கட்சி தாவல் சட்டத்திற்கு எதிரானது. எங்கள் கட்சியில் பிளவை ஏற்படுத்த, சபாநாயகருடன் சேர்ந்து முதல்வர் நிதிஷ் சதி செய்கிறார் என லாலு கூறினார்.
சபாநாயகர் உதய் நாராயணன் சவுத்திரி கூறுகையில், இது தற்காலிகமான ஏற்பாடு தான். அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருகிறேன். இறுதி முடிவு எடுப்பதற்கு கால நிர்ணயம் எதுவும் செய்யவில்லை இருப்பினும், அடுத்த சட்டசபை தொடருக்குள் முடிவு எடுக்கப்படும் என்றார் சபாநாயகர் உதய் நாராயணன் சவுத்திரி.