மே 5 – எல்ஜி நிறுவனத்தின் G3 திறன்பேசிகள், இம்மாதம் 27-ம் தேதி, வெளியிடப்படும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் இணையத்தளங்களில் G3 திறன்பேசிகளின் புகைப்படங்கள் வெளியானது. அதன் மூலமாக G3 திறன்பேசிகளானது, அந்நிறுவனத்தின் முந்தைய தாயாரிப்பான G2 போன்ற தோற்றத்துடனே வெளிவர இருக்கின்றது எனத் தெரியவருகின்றது.
எனினும் அதன் பரிமாணத்திலும், பருமனிலும் சிறிய மாறுபாடுகள் இருக்கும் எனக் கூறப்படுகின்றது.
LG G3 திறன்பேசிகளின் பேனல் ஆனது பாலிகார்பநேட் கண்ணாடிகளால் ஆனது. 5.5 அங்குல அளவு கொண்டதாக உருவாக்கப்படும் இந்த திறன்பேசிகளில் கைரேகையை ஸ்கேன் செய்வதற்கான பொத்தான்கள் வைக்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.
இது தவிர, சில சிறப்பான அம்சங்களும் LG G3-ஐ, வாடிக்கையாளர்கள் மத்தியில் கவர்ந்து இழுக்கும் எனக் கூறப்படுகின்றது.
கூகுள் நிறுவனத்தின் நெக்சஸ் 6 திறன்பேசிகளானது, LG G3-ஐ முன்மாதிரியாகக் கொண்டு உருவாகி வருகின்றது எனக் கூறப்படுகின்றது.