மே 28 – மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே எல்ஜி நிறுவனத்தின் ஜி3 திறன்பேசிகள் நேற்று வெளியிடப்பட்டது.
நியூயார்க், லண்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய மூன்று நகரங்களில் ஒரே சமயத்தில் அந்நிறுவனத்தால் இந்த ஜி3 திறன்பேசிகள் வெளியிடப்பட்டன.
எனினும், இந்த திறன்பேசிகளுக்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
திறன்பேசிகளின் உற்பத்தியில் ஏற்பட்டுவரும் போட்டி காரணமாக எல்ஜி நிறுவனம், பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த புதிய எல்ஜி ஜி3 திறன்பேசிகளை உருவாக்கியுள்ளது.
அண்டிராய்ட் 4.4.2 கிட்கேட் (Kitkat) இயங்குதளத்தில் செயல்படக் கூடிய இந்த ஜி3 திறன்பேசிகளின் சிறப்பு அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் அறிவித்துள்ளதாவது:-
5.5 அங்குல அளவு கொண்ட இதன் திரை AH-IPS LCD QHD (2560 x 1440) பிக்சல் தீர்மானம் உடையதாக உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற திறன்பேசிகளைக் காட்டிலும், இதன் வேகத்தை அதிகரிக்க Snapdragon 801 SoC செயலி (Processor) பொருத்தப்பட்டுள்ளது.
இவை தவிர 3GB முதன்மை நினைவகம், 13 MB கேமரா, காணொளி அழைப்புகளுக்காக 2.1 MB கேமரா ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளது. மேலும், இதில் பயன்படுத்தப்படும் MicroSD கார்ட்டின் அளவவை 128GB வரை அதிகரிக்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது.
இவை மட்டுமல்லாமல் ‘ஸ்மார்ட் கிபோர்ட்’ (Smart Keyboard), ‘ஸ்மார்ட் நோட்டீஸ்’ (Smart Notice), ஸ்மார்ட் செக்யூரிட்டி (Smart Security) என்ற பெயர்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வசதிகள், G3 திறன்பேசிகளை மிகச் சுலபமான வகையில் கையாள்வதற்கு வழிவகை செய்கின்றன.