மே 5 – உலக அளவில் 2014-ன், முதல் காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச்), டேப்லெட்களின் விற்பனை 3.9% அதிகரித்து உள்ளது. எனினும் இது மிகவும் மந்தமான வளர்ச்சியாகவே கருதப்படுகின்றது.
டேப்லெட்களின் விற்பனை பற்றி ஆராய்ச்சி நிறுவனம் ஐடிசி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்,”கடந்த 2013-ம் ஆண்டின், இதே காலாண்டில், இந்த எண்ணிக்கை, 48.6 மில்லியனாக இருந்தது. தற்போது 50.4 மில்லியனாக உயர்ந்துள்ளது. எனினும் இந்த வளர்ச்சியானது, நிறுவனங்களால் எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் குறைவாகும். அகன்ற திரையுடன், பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய திறன்பேசிகள், அதிகளவில் சந்தைக்கு வரத் துவங்கியதே, டேப்லெட்களின் மந்தமான வளர்ச்சிக்குக் காரணம்” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கணக்கீட்டு காலாண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் டேப்லெட் விற்பனை, 19.5 மில்லியன் என்ற எண்ணிக்கையிலிருந்து, 16.4 மில்லியனாக சரிவடைந்துள்ளது. எனினும் டேப்லெட்கள் விற்பனையில் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும், ஆப்பிள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.