புதுடில்லி, மே 20 – இந்தியப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பாஜக தலைமையிலான கூட்டணி பெற்றுள்ளதை அடுத்து, இன்று புதுடில்லியிலுள்ள இந்திய அதிபர் மாளிகைக்கு சென்று இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜியை நரேந்திர மோடி சந்தித்தார்.
நரேந்திர மோடியை வரவேற்ற அதிபர், அடுத்த அரசாங்கத்தை அமைக்க மோடியை அழைக்கும் கடிதத்தை அவருக்கு வழங்கினார்.
இதற்கிடையில், 29 கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டை ஆள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக அறிவித்தது.
பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மோடி, தான் எதிர்வரும் மே 26ஆம் தேதி திங்கட்கிழமை, மாலை 6.00 மணிக்கு பிரதமராகப் பதவி உறுதி மொழி எடுக்கவிருப்பதாக அறிவித்தார்.
நாடாளுமன்ற வாசல் படிகளை தொட்டு வணங்கிய மோடி
முன்னதாக, நாடாளுமன்றத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க நாடாளுமன்றம் வந்த மோடி, காரை விட்டு இறங்கியதும் கீழே குனிந்து நாடாளுமன்ற வாசலைத் தொட்டு வணங்கினார்.
நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் ஆலயம் என்றும் மோடி புகழாரம் சூட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றும்போது, ஒரு கட்டத்தில், இந்தியத் திருநாடு எனது தாய் என்று பொருள்படும் விதத்தில் பேசிய போது குரல் உடைந்து, உணர்ச்சிகரமாக கண் கலங்கி அழுதார் நரேந்திர மோடி.
கடந்த சில மாதங்களாக, தேர்தல் களத்தில் பாஜக கூட்டணிக்குத் தலைமை தாங்கும் தளபதியாக – ஒரு போர் வீரனாக – மேடைகளில் வீரமுழக்கமிட்டு உலா வந்த அந்த கம்பீரமான மனிதர் –
இன்று முதல் முறையாக , நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்து – தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றியபோது – நானும் உங்களைப் போன்று சாதாரண மனிதன்தான் – இளகிய இதயம் படைத்தவன்தான் என்பதைக் காட்டும் விதமாக மோடி கண்கலங்கி நின்றதை, அகில உலகமும் தொலைக்காட்சியில் பார்த்தது.
(மோடி நாடாளுமன்ற வாசலை வந்தடைந்தபோது வணங்கும் காட்சி)
படங்கள் : EPA