வாஷிங்டன், ஜூன் 9 – அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ, நட்பு ஊடகங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் இணைந்துள்ளது.
டுவிட்டர் இணையதளத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இணைந்த சிஐஏ-விற்கு 9 மணி நேரத்துக்குள்ளாக 2,68,000 பேர் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். அந்த அமைப்பு தனது முதல் பதிவில், “இது எங்கள் முதல் பதிவு என்பதை நாங்கள் உறுதி செய்யப்போவதுமில்லை, மறுக்கப்போவதுமில்லை” என்று தெரிவித்துள்ளது.
அந்த முதல் பதிவானது 1,70,000 முறை மறுபதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் மக்கள் அதை தங்கள் விருப்பப் பதிவாக தேர்வு செய்துள்ளனர்.
உளவு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்ட போது அதற்கு பதில் பதிவு அளித்துள்ள சிஐஏ, “உளவு விவகாரங்கள் குறித்து நாங்கள் பேசப்போவதில்லை. ஆனால், நீங்கள் எங்களை பின்பற்றலாம்” என்று தெரிவித்துள்ளது.
பேஸ்புக் வலைதளத்தில் இணைந்த அன்றே, 7,300-க்கும் அதிகமானோர் சிஐஏ-வை தங்கள் விருப்பமாகத் தேர்வு செய்துள்ளனர். சிஐஏ தனது பேஸ்புக் பக்கத்தில், “பாதுகாப்பில் முதல் இடத்தில் உள்ளோம். மற்றவர்களால் சாதிக்க முடியாததை நாங்கள் சாதிப்போம். மற்றவர்கள் செல்ல முடியாத இடத்துக்கு நாங்கள் செல்வோம்” பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிஐஏ இயக்குநர் ஜான் பிரென்னன் கூறுகையில், “இதுபோன்ற சமூக வலைதளங்களுக்கு வருவதன் மூலமாக, சிஐஏ மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ள இயலும். சிஐஏ-ன் திட்டம், வரலாறு மற்றும் இதர மேம்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தகவல்கள் தர முடியும்” என்று கூறியுள்ளார்.