புதுடில்லி, ஜூன் 9 – சீனாவுடன் இந்தியா போட்டியிட வேண்டுமானால் ஆற்றல், அளவு, வேகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என நரேந்திர மோடி கூறியுள்ளார். டில்லியில் இந்தியாவை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வருவது தொடர்பான புத்தகத்தை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு அவர் பேசியதாவது,
“சீனாவுடன் இந்தியா போட்டியிட வேண்டுமானால் ஆற்றல், அளவு, வேகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த நாட்டின் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் தான்.
இந்த மனித வளத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவர்களது ஆற்றலை மேம்படுத்துவது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது.
இன்றைய சமூகத்தில் நல்ல ஆசிரியர்கள் மிகப்பெரிய தேவையாக இருக்கிறார்கள். ஆனால் மிகக்குறைவான எண்ணிக்கையில்தான் நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
நமது தேசியக்கொடியை எடுத்துக் கொள்ளுங்கள். நமது தேசியக் கொடியில் பச்சை, வெள்ளை, காவி ஆகிய மூன்று நிறங்கள் உள்ளன. அவற்றில் பச்சை நிறத்தைக் குறித்து கூற வேண்டுமானால், இந்தியாவுக்கு இரண்டாவது பசுமைப் புரட்சி அவசியம்.
வேளாண் உற்பத்தித்திறன் அதிகரிப்பு, சேமிப்புக் கிடங்குகளை பரவலாக்குவது உள்ளிட்டவை மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். அடுத்ததாக வெள்ளை நிறம். பால் உற்பத்தி மற்றும் கால்நடைகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆதரவு அமைப்பு ஆகியவற்றின் மீது வெண்மைப் புரட்சி கவனம் செலுத்த வேண்டும்.
காவி நிறமானது எரிசக்தியைக் குறிக்கிறது. நம் நாட்டுக்கு காவிப் புரட்சி அவசியம். இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தித் தேவையை சமாளிக்க சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மீது காவிப் புரட்சி கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
தேசியக் கொடியின் மத்தியில் நீல நிறத்தில் அசோக சக்கரம் அமைந்துள்ளது. நீலப் புரட்சியானது மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும்.
பழங்காலத்தில் நதிக்கரைகளில் நகரங்கள் அமைக்கப்பட்டன. தற்போது நெடுஞ்சாலைகளையொட்டி நகரங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் எதிர்காலத்தில் கண்ணாடி இழை கேபிள் நெட்வொர்க் மற்றும் அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு வசதிகளைச் சார்ந்து நகரங்கள் உருவாக்கப்படும்” என்று நரேந்திர மோடி பேசினார்.
டில்லி வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வர்த்தகம், முதலீடு உள்பட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர். மத்தியில் அமைந்துள்ள புதிய அரசுடன் சீன அரசு மேற்கொள்ளும் உயர்நிலை அளவிலான முதல் பேச்சுவார்த்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.