காபூல், ஜூன் 21 – ஆப்கன் அதிபருக்கான இரண்டாம் கட்ட தேர்தலிலும் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள சர்ச்சையை ஐ.நா. தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஹமீது கர்சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அங்கு கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் முன்னிலை பெற்றிருந்த வேட்பாளரான அப்துல்லா அப்துல்லா, கடந்த வாரம் நடைபெற்ற இறுதிக்கட்டத் தேர்தலில் பின்தங்கினார். அதனால் அவர் இரண்டாம் கட்ட தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அதனால் இந்த விவகாரத்தில் ஐ.நா. தலையிடவேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தார்.
இந்நிலையில், அவரது இந்தக் கோரிக்கைக்கு வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்த அந்நாட்டு அதிபர் கர்சாய், “தேர்தல் பிரச்னைக்கு தீர்வு காண ஐ.நா.வின் தலையீடு உதவும்” என்று கூறியுள்ளார்.
ஆப்கன் முக்கியத் தலைவர்கள் பலரும் இந்த கோரிக்கையை வலியுறுத்துவதால் இரண்டாம் கட்ட தேர்தலும் ரத்து செய்யப்படும் அபாயம் எழுந்துள்ளது. இது அந்நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை தளர்த்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஆப்கனில் மக்கள் ஒவ்வொருமுறை தேர்தலை சந்திக்கும் பொழுதும் தலீபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.