ஜூன் 21 – ஒருங்கீட்டுக் குறியீடுகள் எனப்படும் யுனிகோட்கள், கணினி பயன்பாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் குறியீடுகள் ஆகும். எழுத்துகள் மற்றும் வார்த்தைகள் மூலம் விளக்க வேண்டிய உணர்வுகளை ஒற்றை குறியீடுகள் மூலம் விளக்கிவிடலாம்.
இந்த குறியீடுகளை வெளியீடும், இலாப நோக்கமற்ற அமைப்பான ‘யுனிகோட் கூட்டமைப்பு’ (Unicode Consortium) கடந்த திங்கள் கிழமை, புதிய பதிப்பான Unicode Standard version 7.0-வை வெளியிட்டது. இந்த புதிய பதிப்பில் சுமார் 2,834 புதிய குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், 250-க்கும் மேற்பட்ட படவெழுத்துக்கள் (emoji) சேர்க்கப்பட்டுள்ளன.
இது குறித்து யுனிகோட் கூட்டமைப்பு தனது வலைப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
“இந்த புதிய பதிப்பில் பல்வேறு நாடுகளின் நாணயக் குறியீடுகள், 23 வரலாற்றுக் எழுத்துக்கள் மற்றும் இமோஜி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதனை ஆப்பிளின் ஐஒஎஸ் மற்றும் கூகுளின் ஆண்டிராய்டு உட்பட அனைத்து மென்பொருள்களிலும் மேம்படுத்த அனுமதி வழங்கப் பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளது.
எழுத்துருக்களின் பயன்பாடு மற்றும் அதன் தேவை ஆகியவற்றை கண்டறிந்த பின்னரே இமோஜிக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் புதிய ஐஒஎஸ் உருவாக்கத்தின் பொது மாறுபட்ட எழுத்துருக்களை மேம்படுத்துவதாக கூறியிருந்தது. ஆனால் அந்த முயற்சியினை பின்னர் கைவிட்டது. தற்போது, உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய யுனிகோட் பதிப்பினை விரைவில் ஐஒஎஸ் இயங்கு தளங்களில் மேம்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.