புதுடில்லி, ஜூன் 27 – என் முதல் 30 நாள் பதவிக்காலம் தேனிலவு காலம் போல் சொகுசாக இருக்கவில்லை. பதவியேற்ற 100 மணி நேரத்திற்கு உள்ளாகவே அரசுக்கு எதிராக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மே 26ஆம் தேதி பதவியேற்றது. நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்தது. இதையொட்டி,இணையதள பக்கத்தில் மோடி கூறியுள்ளதாவது:
“என் முதல் 30 நாள் பதவிக்காலம் தேனிலவு போன்ற சொகுசான நாட்களாக இல்லை. புதிய அரசு பதவியேற்ற 100 மணி நேரத்திற்கு உள்ளாகவே அடுக்கடுக்காகபல குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. இதிலிருந்து பல விஷயங்களில் எங்களை நாங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது என்பதை நான் உணர்ந்தேன்.”
“அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டாலும், நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பதால் அதை பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. கடந்த 30 நாட்களில், ஒவ்வொரு முடிவையும் நாங்கள் தேசத்தின் நலன் கருதியே எடுத்தோம். ஆனாலும் கடந்த ஒரு மாத காலத்தில் சில சம்பவங்கள் நிகழ்ந்தன. எங்கள் அரசுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் அது தொடர்பான சர்ச்சைகள் இப்போது வரை நீடிக்கின்றன.”
“அரசு அமைப்பு முறைக்கு உள்ளேயும் வெளியேயும் சில பிரிவினர் உள்ளனர். அவர்களுக்கு எங்களின் உண்மையான செயல்பாடு பற்றியும் நோக்கம் பற்றியும் தெரிவிக்க வேண்டும். அதுவே டில்லியில் என் முன் உள்ள சவால். வரும் ஆண்டுகளில், இந்தியாவை மிகப்பெரிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் திடமாக உள்ளோம். அதனால் என் நம்பிக்கையும் உறுதியும் பெருமளவு அதிகரித்துள்ளது. முந்தைய அரசின் 67 ஆண்டு கால செயல்பாடுகளை என் தலைமையிலான ஒரு மாத அரசுடன் ஒப்பிடக் கூடாது.”
“ஆனாலும், கடந்த ஒரு மாதத்தில் என் தலைமையிலான அணியினர் ஒவ்வொரு நிமிடத்தையும் நாட்டு மக்களின் நலனுக்காக அர்ப்பணித்துள்ளனர். ஒவ்வொரு புதிய அரசு பதவியேற்றதும் முதலில் சில நாட்களை அந்த அரசின் தேனிலவு காலம் என பத்திரிகையாளர்கள் வர்ணிப்பர். முந்தைய அரசு கூட 100 நாட்கள் வரையிலான காலத்தை தேனிலவு காலமாக கடைபிடித்தது.”
“அப்படிப்பட்ட தேனிலவு காலம் எதையும் நாங்கள் கடைபிடிக்கவில்லை. ஒரு மாதத்திற்கு முன் நான் பிரதமராக பதவியேற்ற போது பதவிக்கு புதியவன் என்பதால் மத்திய அரசின் செயல்பாடுகளை அறிய குறைந்தபட்சம் ஓர் ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளாகும் என நினைத்தேன். மற்றவர்களும் இதையே கூறினர். ஆனால் இன்றுஅப்படிப்பட்ட எண்ணம் எதுவும் என் மனதில் இல்லை. பலமான ஆதரவையும் நல்லாசியையும் வழங்கிய மக்களுக்கு நன்றி” என்று நரேந்திர மோடி கூறி உள்ளார்.