சிட்னி, ஜூன் 27 – கடந்த மார்ச் 8-ம் தேதி மாயமான எம்எச்370 விமானம், இந்தியப் பெருங்க கடலில் வீழுந்த நேரத்தில், ‘ஆட்டோ-பைலட் மோட்’ எனும் தானியங்கி முறையில் தன்னிச்சையாக இயங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய விசாரணைக் குழுவின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் வாரன் டிரஸ் கூறுகையில், “எம்எச்370 விமானம் வேண்டுமென்றே தனது வரையறுக்கப்பட்ட பாதையில் இருந்து மாறி வேறு பாதையில் பயணித்துள்ளது. குறிப்பாக, தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் எரிபொருள் தீரும் வரையில் ஆட்டோ-பைலட் மோட்-ல் இயக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை தேடுதல் வேட்டை நடந்த பகுதிகளிலிருந்து தெற்கு நோக்கி புதிய முயற்சிகள் தொடங்க இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்தப் புதிய பகுதி, ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரைக்கு சுமார் 2,000 கிமீ தெற்காக இருக்கிறது. சுமார் 60,000 சதுர கிமீ பரப்பளவுள்ள இந்த இடத்தில் புதிய தேடல் முயற்சிகள் எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 8-ம் தேதி அதிகாலை, 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், வியட்நாம் கடல்பகுதியில் நடுவானில் மாயமாகி 100 நாட்களுக்கும் மேலாகி விட்டது.
எனினும் விமானம் எங்கே சென்றது என்பதற்கு இன்று வரிஅ விடை தெரியாத புதிராகவே இருந்து வருகின்றது. நவீன அறிவியலுக்கே சவால் விடும் வகையில் இருந்து வரும், இந்த சம்பவம் தொடர்பாக அன்றாடம் புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
மிகுந்த சிரத்தையோடு தேடுதல் வேட்டையை நடத்தி வரும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் குழுவும், சர்வதேச விசாரணையமும், கடைசியாக கிடைத்த சமிஞ்ஞைகள் மற்றும் செயற்கைக்கோள் மூலம் கிடைத்த தகவல்களை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.