சென்னை, ஆகஸ்ட் 6 – கவிஞர் வைரமுத்துவை சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தனது 60-ஆவது பிறந்த நாளை கடந்த மாதம் கொண்டாடினார் கவிஞர் வைரமுத்து.
விழாவில் பங்கேற்க கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி கோவைக்குச் சென்றிருந்தபோது வைரமுத்துவுக்கு முதுகுத் தண்டு வடத்தில் திடீரென வலி ஏற்பட்டது. இதையடுத்து அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் வைரமுத்துவுக்கு முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து, கோவையிலிருந்து சென்னைக்குத் திரும்பிய வைரமுத்து அவருடைய பெசன்ட் நகர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், வைரமுத்துவை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை சந்தித்த ரஜினிகாந்த், அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அப்போது வைரமுத்துவுக்கு ரோஜா பூங்கொத்து ஒன்றை பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்தார். வைரமுத்துவுடன் சுமார் அரை மணி நேரம் ரஜினிகாந்த் பேசிக்கொண்டிருந்தார்.