Home கலை உலகம் சின்னத்திரை விமர்சனம் : ‘ரசிக்க ருசிக்க’ – உணவுப் பிரியர்களுக்கான சிறந்த பரிமாறல்

சின்னத்திரை விமர்சனம் : ‘ரசிக்க ருசிக்க’ – உணவுப் பிரியர்களுக்கான சிறந்த பரிமாறல்

671
0
SHARE
Ad

Rasikka Rusikkaகோலாலம்பூர், செப்டம்பர் 9 – வானவில், விண்மீன் ஆகிய உள்நாட்டு  அலைவரிசைகளின் வழி பல உள்நாட்டு நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி ஒளிபரப்பி வரும் ஆஸ்ட்ரோவின் புதிய நிகழ்ச்சி ‘ரசிக்க ருசிக்க’.

பயணங்களின் ஊடே ஆங்காங்கே இருக்கும் சிறந்த உணவகங்களையும், உணவுகளையும் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் பல வெளிநாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வரிசையில், அதே போன்று தமிழிலேயே ஒரு நிகழ்ச்சியைப் படைத்திருப்பது சுவாரசியமாக இருக்கின்றது.

தலைப்பும் வெகு பொருத்தம்!

#TamilSchoolmychoice

கடந்த வெள்ளிக்கிழமை (5 செப்டம்பர் 2014) ஒளிபரப்பான முதல் நிகழ்ச்சி, பலருக்கும் நன்கு அறிமுகமான கம்போங் அத்தாப்பிலுள்ள மீன்தலைக் கறி உணவகத்தின் சிறப்பியல்புகளோடு அறிமுகமானது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், இரவு 10 மணிக்கு மேல் நிகழ்ச்சியை படைப்பது – அனைவரும் பார்க்கும் விதத்தில் பொருத்தமான நேரத் தேர்வு.

நிகழ்ச்சியை நடத்துகின்ற பாலகணபதி வில்லியம் களையாக இருப்பதோடு, சுறுசுறுப்பாகவும் பேசுகின்றார்.

பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மெதுவாகப் பேசுவார்கள். அதனால் நிகழ்ச்சியும் மெதுவாக நகர்வது போல் தோன்றும்.அதிலும் உணவுகளை விலாவாரியாக விவரிக்கும்போது சில சமயங்களில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் போரடிப்பது போல் இருக்கும்.

ஆனால்,‘ரசிக்க, ருசிக்க’ விறுவிறுப்பான படத் தொகுப்பின் காரணமாக, வேகமாக நகர்கின்றது. உணவகம் அமைந்துள்ள கோலாலம்பூரின் தெருக்களையும் சுட்டிக் காட்டுவதோடு, அந்தந்த உணவகத்திற்கு செல்லும் பாதையையும் தெளிவாக விவரிப்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

உணவகங்களுக்கு பெரிய, நவீன மோட்டார் சைக்கிளில் நிகழ்ச்சி நடத்துநர் செல்வது புதுமையான இணைப்புதான்.

அந்தந்த இடங்களுக்கு பெயர் வந்த காரணத்தை விளக்குவதும் சிறந்த முயற்சி. முதல் நிகழ்ச்சியில் கோலாலம்பூரில் பிரபலமான ‘பங்சார்’ என்ற பெயர் எப்படி வந்தது எனத் தரப்பட்டிருக்கும் விளக்கம் பலரும் இதுவரை கேள்விப்பட்டிருக்காத ஒன்றாகும்.

ஆனால் சில குறைகளையும் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.

அரை மணி நேர நிகழ்ச்சிக்குள், நான்கைந்து உணவகங்களைத் திணிக்க முற்பட்டிருப்பது தேவையில்லாத வீண் முயற்சி. ஓரிரண்டு உணவகங்களை மட்டும் தேர்ந்தெடுத்தால் நிகழ்ச்சியும் சுவாரசியமாக இருக்கும். கூடுதல் தகவல்களையும் தர முடியும்.

அதே வேளையில், அந்தந்த உணவகங்களின் உணவு முறைகள் சிறப்பாக அமைந்திருப்பதற்கான காரணத்தையும் இன்னும் கொஞ்சம் விளக்கி, சில சமையல் குறிப்புகள், விளக்கங்களையும் தந்தால், குடும்ப மகளிர்களின் கவனத்தையும் திசை திருப்ப முடியும். அவர்களும் ஆர்வமுடன் பார்ப்பார்கள்.

பிடித்த சாப்பாட்டைத் தேடித் தேடி அலைவது பொதுவாக ஆண்கள்தான் என்பதால், வீட்டில் இருக்கும் பெண்களை ஈர்ப்பதற்கும், அவர்களையும் பார்க்க வைப்பதற்கும் உணவக சமையல்காரர்களின் சமையல் குறிப்புகள் உதவி புரியும்.

குறிப்பிட்ட உணவகத்தின் ஒரே உணவை மட்டும் காட்டாமல், அந்த உணவகத்தில் கிடைக்கும் மற்ற வகை உணவுகளையும் விவரிக்கலாம்.

உதாரணமாக, முதல் நிகழ்ச்சியில் காட்டப்பட்ட, கம்போங் அத்தாப் மீன் தலைக் கறி உணவகத்தில் பொரித்த கோழியும், கணவாய் சம்பலும் கூட பிரபலம் என்பது அங்கு சாப்பிட்டவர்களுக்குத் தெரியும்.

‘ரசிக்க, ருசிக்க’ ரசிக்கத்தக்க நல்ல ஆரம்பம்.

நாக்குக்கு ருசியாக சாப்பிட என்ன கிடைக்கும், எங்கே கிடைக்கும் என தேடி அலையும் சாப்பாட்டுப் பிரியர்களுக்கு ஏற்ற சிறந்த பரிமாறல்.

-இரா.முத்தரசன்