செப்டம்பர் 9 – ஆப்பிள் ஐபோன் விரும்பிகளுக்கு இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமையவிருக்கின்றது. காரணம் இன்று அந்நிறுவனம் தங்களது ஐபோன் 6 -ஐ சான்பிரான்சிஸ்கோவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் அறிமுகம் செய்ய இருப்பதோடு, அந்நிகழ்வில் ஐவாட்ச் பற்றிய சிறு கண்ணோட்டத்தையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆப்பிள் பயனர்களுக்கு மற்றுமொரு இனிப்பான செய்தி என்னவென்றால், இந்த ஐபோன் 6 அறிமுக விழாவை தங்களது ஐபோன் கருவிகளிலும், பிற ஆப்பிள் தயாரிப்புகளிலும், http://www.apple.com/live/ என்ற இணையத்தளத்தில் நேரலையாக (livestream ) கண்டுகளிக்கலாம்.
இந்த நிகழ்வு பசிபிக் நேரப்படி காலை 10 மணிக்கு நேரலையாக வழங்கப்படவுள்ளது. மலேசிய நேரப்படி நாளை (செப்டம்பர் 10) அதிகாலை 1 மணியளவில் காணலாம்.
எனினும், இந்த நிகழ்ச்சியை பயனர்கள் தங்களது ஐபோன்களில் பார்ப்பதற்கு சில குறிப்பிட்ட வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
அவை, ஆப்பிள் கருவிகளில் சஃபாரி உலாவியைப் (Browser) பயன்படுத்தி மட்டுமே இந்த நிகழ்ச்சியை நேரலையாகப் பார்க்க முடியும். ஐபோன், ஐபேட் அல்லது ஐபாட் டச் ஆகியவற்றில் ஐஓஎஸ் 6 அல்லது அதற்கு மேற்பட்ட இயங்குதளம் இருக்க வேண்டும்.
ஆப்பிள் கணினியைப் பயன்படுத்துபவர்களின் உலாவி சஃபாரி 5.1.10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். அதே வேளையில் இயங்குதளம் மேக் ஓஎஸ் எக்ஸ் 10.6.8 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.
ஆப்பிள் டிவியில் இந்நிகழ்ச்சியைக் காண இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை ஃபர்ம்வேர் பதிப்பு 6.2 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.