Home நாடு கூகுள், ஆப்பிள் மலேசிய முதலீடுகள் – அன்வார் தலைமைக்கான வெற்றியா?

கூகுள், ஆப்பிள் மலேசிய முதலீடுகள் – அன்வார் தலைமைக்கான வெற்றியா?

368
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கூகுள் நிறுவனம் மலேசியாவில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை (RM9.4 பில்லியன்) முதலீடு செய்யவிருக்கிறது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் முதல் மலேசிய தரவுத்தொகுப்பு மையம் மற்றும் கூகுள் கிளவுட் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனைக் கூடமும் எதிர்வரும் ஜூன் 22 முதல் செயல்படவிருக்கிறது.

உலகளாவிய அளவில் கிளவுட் சேவைகளுக்காக வளர்ந்து கொண்டிருக்கும் தேவையையும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) கல்வி நிகழ்ச்சிகளையும் கூகுளின் முதலீடுகள் பூர்த்தி செய்யும்.

#TamilSchoolmychoice

கூகுள், ஆப்பிள் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் மலேசியா மீது கொண்டுள்ள நம்பிக்கையையும், குறிப்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமைத்துவம் மீது கொண்டிருக்கும் நல்லெண்ணத்தையும் இந்த முதலீடுகள் எடுத்துக் காட்டுகின்றன எனலாம்.

அண்மைய சில மாதங்களாக இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் பிரதமர் அன்வார் ஹாமாஸ் தரப்புக்கு ஆதரவாக விடுத்து வரும் அறிக்கைகள், அந்த இயக்கத்தின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்புகள் அனைத்துலக அளவில் சர்ச்சையாகின. அமெரிக்கா மலேசியாவைப் புறக்கணிக்கும் – பொருளாதாரத் தடைகள் விதிக்கும் – என்றெல்லாம் கூட ஆரூடங்கள் கூறப்பட்டன.

இந்நிலையில்தான் கூகுள், ஆப்பிள் போன்ற மிகப் பெரிய அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றன.

கூகுளின் முதலீடு மலேசியாவில் இதுவரை உள்ள மிகப்பெரிய திட்டமிடப்பட்ட முதலீடாகும். கடந்த 13 ஆண்டுகளாக மலேசியாவைத் தங்களின் முக்கிய வணிகத் தளமாக கூகுள் கொண்டுள்ளது.

கூகிள் தனது முதலீடுகளின் மூலம் 2030 ஆம் ஆண்டு வரை 3.2 பில்லியன் டாலர் (RM15.04 பில்லியன்) நேர்மறை பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் –  26,500 வேலைகளை உருவாக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கூகுள் தரவுத்தொகுப்பு மையங்களை உருவாக்கி இப்போது இயக்கும் 11 நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்.

மலேசியாவில் இயங்கும் கிளவுட் மையம் உலகம் முழுவதும் தற்போது செயல்பாட்டில் உள்ள 40 மையங்கள் 121 மண்டலங்களில் ஒன்றாக இணையும்.

அமெரிக்காவின் மற்றொரு வணிகப் பிரமுகர் எலென் மாஸ்க்கும் அன்வாருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு மலேசியாவில் முதலீடுகளை பெருக்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.