நியூயார்க் : முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கொண்டுவரப்பட்ட 34 குற்றச்சாட்டுகளையும் விசாரித்த மான்ஹாட்டன் நீதிமன்றம் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலுல் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார் எனத் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கை செவிமெடுத்த ஜூரி என்னும் வழக்கு கண்காணிப்பாளர்கள் டிரம்ப் குற்றவாளி என்னும் தங்களின் முடிவை அறிவித்தனர். அமெரிக்க நீதிமன்ற நடைமுறைகளின்படி குற்றவியல் வழக்குகளில் ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பது ஜூரி என்னும் 12 பேர் கொண்ட குழுவினர் நிர்ணயிப்பர். அதன் பிறகு நீதிபதி குற்றவாளிக்கான தண்டனையை நிர்ணயிப்பார். ஜூரிக்களுக்கு நீதிபதி வழிகாட்டுதல்களைக் கூற முடியுமே தவிர, அவர்களின் முடிவில் தலையிட முடியாது.
அமெரிக்க வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட முதல் வழக்காக டிரம்ப் வழக்கு கருதப்படுகிறது.
தீர்ப்பு விவரங்கள்:
*மான்ஹாட்டன் நீதிமன்ற ஜூரி டொனால்ட் டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகளை நிரூபித்தது.
*இந்த தீர்ப்பு, அமெரிக்க வரலாற்றில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட முதல் முன்னாள் அதிபராக டிரம்ப்பை வரலாற்றில் பதிவு செய்துள்ளது.
*டிரம்புக்கான தண்டனை என்ன என்பது ஜூலை 11 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
*எத்தகைய தண்டனை அளிப்பது என்பது வழக்கை விசாரித்த நீதிபதி ஜுவான் மெர்சனின் முடிவாகும்.
*டிரம்புக்கான தண்டனை சிறைவாசம், அபராதம் என இருக்கலாம்.
*2016 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் சட்டவிரோத சதி ஒன்றில் ஈடுபட்டார் என்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
*இதே வழக்கில் ஒரு பெண்மணிக்கு தன் பாலியல் ரகசியங்களை மறைப்பதற்காக பணம் கொடுத்ததாகவும், தனிது வணிக பதிவுகளை தந்திரமாக மாற்றியமைத்ததாகவும் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது.
*இந்தத் தீர்ப்பினால் 2024 ஜனாதிபதி தேர்தலில் தாக்கம் ஏற்படுமா? குற்றவாளியாக இருந்தாலும், 2024 குடியரசுக் கட்சிக்கான அதிபர் வேட்பாளராக உள்ள டிரம்ப் தேர்தலில் போட்டியிடலாம்.
*டிரம்ப், ஜூரியின் தீர்ப்பை “அவமானம்” என்று விவரித்தார். “உண்மையான தீர்ப்பு” 2024 ஜனாதிபதி தேர்தலில் வரும் என்று தெரிவித்தார்.
*அதிபர் ஜோ பிடன், தேர்தல் குறித்துக் கருத்துரைத்தபோது, டிரம்ப் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.