கோலாலம்பூர், செப்டம்பர் 30 – கடந்த செப்டம்பர் 12, 13ஆம் தேதி இரண்டு நாட்களாக கோலாலம்பூரை ஒரு கலக்கு கலக்கிய ‘சைமா’ எனப்படும் தென்னிந்திய திரைப்பட அனைத்துலக விருதளிப்பு விழா விரைவில் தமிழகத்தின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கின்றது.
இதனால், மலேசியாவில் அஸ்ட்ரோ அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் சன் தொலைக்காட்சியின் வழி, கோலாலம்பூரில் இந்த நிகழ்ச்சியைக் காண முடியாமல் போன மலேசியர்களும் இதனைக் கண்டு களிக்கலாம்.
இந்த சைமா நிகழ்ச்சி குறித்த ஒரு மணி நேர முன்னோட்டம் ஒன்றை கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சன் தொலைக்காட்சி மலேசியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளுடன், நேர்காணல்களுடன் ஒளிபரப்பியது.
இந்த சைமா விருதளிப்பு விழா குறித்த செல்லியல் வழங்கும் பார்வையையும், இந்த விழாவின் சில சிறப்பு அம்சங்களையும் இங்கே வழங்குகின்றோம்.
அனைவரையும் கவர்ந்த பிரம்மாண்டமான அரங்கு
சைமா விருதளிப்பு விழா இதுவரை நாம் காணாத பிரம்மாண்டமான அரங்கத்தாலும், மற்றும் எண்ணிலடங்கா தென்னிந்திய அழகு திரை நட்சத்திரங்களின் அணிவகுப்பாலும், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
முதல் நாள் நிகழ்ச்சி, தெலுங்கு, மலையாளப் படங்களுக்கான விருதளிப்பு என்பதால் கூட்டமும் குறைவாகவே இருந்தது. இருப்பினும், பெயர் தெரியாத ஆனால் அழகான நடிக, நடிகையர் நிறையவே வந்து நிகழ்ச்சியை களை கட்டச் செய்தனர்.
தமிழ் திரைநட்சத்திரங்கள் பலரும் முதல் நாள் வந்திருந்து, தங்களின் சக தெலுங்கு, மலையாள நட்சத்திரங்களுக்கு மரியாதை தந்தார்கள்.
இரண்டாம் நாள் நிகழ்வு – தமிழ், கன்னடப் படங்களுக்கான பரிசளிப்பு
கலக்கல் அறிவிப்பாளர் மிர்ச்சி சிவாவுடன் ஆங்கிலத் தொகுப்பாளினி…
இரண்டாம் நாள் சுமார் 8 மணியளவில் தொடங்கிய தமிழ்ப் படங்களுக்கான விருதளிப்பு விழாவை பிரபல நடிகரும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் நன்கு அனுபவம் பெற்றவருமான மிர்ச்சி சிவா வழி கலகலப்புடன் நகைச்சுவையாக வழி நடத்தினார்.
அவருடன் இணைந்து ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அழகுப் பெண்மணியும் சிறப்புறவே நிகழ்ச்சியை நடத்தினார்.
நிகழ்ச்சிகள் நள்ளிரவைத் தாண்டி அதிகாலை ஒரு மணி வரை தொடர்ந்ததால் பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்பட்டது என்றுதான் கூறவேண்டும்.
அதிலும் தமிழிலும், கன்னடத்திலும் திரைப்படங்களுக்கான பரிசளிப்பை மாறி மாறி நடத்தியதால் கன்னடப் பிரிவுகள் வந்தபோது நமது மலேசிய தமிழ் இரசிகர்களுக்கு சற்றே போரடித்தாலும், மரியாதை கருதி கைதட்டி ஆதரவை வழங்கினார்கள்.
இரசிகர்களை, நிகழ்ச்சி நடந்த அத்தனை மணி நேரங்களும் கட்டிப் போட்டு வைத்திருந்தது அழகு நடிகையரின் பவனிகளும், அவர்களின் அதிரடி கவர்ச்சி ஆடைகளும்தான். ஒருசில நடிகைகளின் கவர்ச்சிகரமான ஆடைகளைப் பார்க்கும் போது எங்கே அவிழ்ந்து விழுந்து விடுமா என நாம் அச்சப்படும் அளவுக்கு அபாயகரமான நெளிவு சுளிவுகளோடு அமைந்திருந்தது.
இரண்டாம் நாள் விழாவில் அசினுக்கு சிறப்பு வழங்க வந்த ஸ்ரீதேவியும் அவருடன் பரிசை இணைந்து வழங்கிய சிரஞ்சீவியும்….
பலரையும் கவர்ந்தவர் அன்றைக்கு நாம் பார்த்த மயிலு ஸ்ரீதேவிதான். இன்னும் அழகும் கம்பீரமும் குறையாமல் கணவருடன் வலம் வந்தார்.
அதிலும் இரண்டாம் நாள் விழாவுக்கு, மெல்லிய கண்ணாடி போன்ற ஊடுருவிப் பார்க்கக் கூடிய “சீ த்ரூ” சேலையை இறக்கமாகக் கட்டி, உடலழகு தெரியும் வண்ணம், இளம் நடிகைகளே பொறாமைப் பெருமூச்சு விடும் அளவுக்கு வந்து அசத்தினார் ஸ்ரீதேவி.
அதே சமயத்தில் ஒரு சில நடிகைகள் அமைதியாக வந்து அமர்ந்திருந்து, பரிசு வாங்கும் நேரத்தில் மட்டும் மேடையில் தோன்றி, ஓ இவர்களும் வந்திருக்கிறார்களா என ஆச்சரியப்பட வைத்தார்கள்.
உதாரணம், மரியான் புகழ் பார்வதி. அடையாளமே தெரியவில்லை.
பொருந்தாத சில விருதுகள்
ஒரு சில விருதுகளைப் பார்க்கும்போது, சில நட்சத்திரங்கள் வந்து விட்டார்களே, அவர்களை எதையாவது கொடுத்து கௌரவிக்க வேண்டுமே என்பதற்காக, வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட விருதுகள் போன்று தோன்றியது.
உதாரணம், இயக்குநர் விஜய், அமலா பால் தம்பதிகளுக்கு கொடுக்கப்பட்ட விருது ‘சிறப்புத் தம்பதிகள் விருது’. கல்யாணம் ஆகி ஓரிரு மாதங்களே ஆன நட்சத்திரங்களுக்கு இப்படியெல்லாம் கூட விருது தருவார்களோ!
சிம்புவுக்கு சிறந்த தென்னிந்திய ஸ்டைல் நடிகர் விருதாம். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக ஆள் நடித்த ஒரு படத்தையும் காணோம்.
மற்றொரு உதாரணம், சிறந்த நடிகருக்கான விருதை, சிறந்த நடிகர் விருது, சிறந்த விமர்சனத்தைப் பெற்ற நடிகர் விருது (கிரிடிக் அவார்ட்), சென்சேஷனல் அவார்ட் (தமிழில் என்ன சொல்வார்கள்?) என்றெல்லாம் பிரித்துப் பிரித்துக் கொடுத்தது.
ஒருவருக்கு கொடுத்தால் இன்னொருவர் கோபித்துக் கொள்வாரோ என்பதால், எல்லாருக்கும் ஏதோ ஒரு பெயரில் சிறந்த நடிகர் என்ற விருதைக் கொடுத்தது போல் இருந்தது, இப்படிச் செய்தது!
விருது வாங்க வராத சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் வந்திருந்து இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருந்தாலும், இரண்டாம் நாள் நிகழ்வில் அவருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டபோது நள்ளிரவு பன்னிரண்டு மணியாகி விட்டிருந்தது.
அவரது பெயரை அறிவித்த போது, வாங்குவதற்கு அவர் மண்டபத்திலேயே இல்லை.
இப்படியாக பல சுவாரசியமான சம்பங்களுடன் கோலாலம்பூரில் நடைபெற்ற சைமா விருதளிப்பு விழாவின் தொகுப்பை விரைவில் சன் தொலைக்காட்சியில் காணலாம்.
தொகுப்பு, படங்கள் – செல்லியல் ஆசிரியர் குழு
படங்கள்