கோலாலம்பூர், செப்டம்பர் 17 – அரசாங்க வானொலியான மின்னல் பண்பலையின் “ஆனந்தத் தேன்காற்று” இசைநிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 12-ம் தேதி, ஷா ஆலம் மிட்லாண்ட்ஸ் கன்வென்சன் சென்டரில், இரவு 7.30 மணியளவில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்ட செல்லியல் வாசகியும், நடன பயிற்றுநருமான ஸ்ரீஷா கங்காதரன் அந்நிகழ்ச்சி குறித்து தனது கருத்தை நம்முடன் பகிர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள தகவலை இங்கே காணலாம்:-
“மின்னல் பண்பலை ஆனந்த தேன்காற்று நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இது முழுக்க முழுக்க 80-ம் ஆண்டு பாடல்கள் கொண்ட நிகழ்ச்சி .இதில் மின்னல் பண்பலை அறிவிப்பாளர்கள் தெய்வீகன் தாமரைச்செல்வன்,புவனா வீரமோகன் ,ஹரி , ரவி ஷண்முகம்,புனிதா சுப்ரமணியம் , பொன் கோகிலம்,சரஸ் பிஜின், புவனேஸ்வரி நாராயணன்,மோகன் மற்றும் லோகேஸ்வரி கணேசன் ஆகியோர் 80-ம் ஆண்டு காலகட்ட த்தில் இருந்த ஆடைகளில் வந்து மக்களைக் கவர்ந்தனர்”
“இரவு 7.30 மணிக்கு தொடங்கவிருந்த இந்நிகழ்ச்சியில் 6.30-க்கு எல்லாம் மக்கள் கூட்டம் முக்கால் அரங்கத்தை நிரப்பியது. சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் வந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.அவர்களில் நூற்றுக்கணக்கானோர் நின்றபடி ரசித்தனர்.இந்த விழாவில் மின்னல் அறிவிப்பாளர்கள் ரஜினி,கார்த்திக்,மோகன்,ராமராஜன்,பாக்யராஜ் , ராதா, ஊர்வசி, ராதிகா போன்ற நட்சத்திரங்களின் குரல்களில் பேசி நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டினர்”
“இளைய நிலா இசைக்குழுவின் இசை மிகவும் அற்புதமாக இருந்தது. பாடகர்களான ஜீவா, இஸ்மாயில் ,தியாகு, ஜானகியம்மா குரலில் பாடி அனைவரையும் ஈர்த்த மோகன், டத்தின் மணிமாலா,டத்தின் ஷீலா நாயர், ஷர்மிளா சிவகுரு, கதிரவன் மற்றும் பின்னணிப் பாடகிகள் இருவர் பாடிய பாடல்கள் என அனைத்தும் அரங்கில் உள்ளவர்களை தாளம் போட வைத்தன.”
“இரவு 12 மணி வரை மக்கள் கூட்டம் கலையவே இல்லை. கரகோஷங்களையும் ஆதரவையும் இறுதி வரை தந்து மெய்சிலிர்க்க வைத்து விட்டனர்.இதற்கிடையில் நகைச்சுவைக் குழுவினரின் நகைச்சுவைகளும், நடன குழுவினரின் நடனங்களும் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.மேலும் நிகழ்ச்சிகளுக்கிடையில் குலுக்கல் அங்கமும் இடம்பெற்றது”
“இதில் மற்றுமொரு சுவாரஸ்யமான விசயம் என்னவெனில், வந்திருந்த ரசிகர்களில்பெரும்பாலானவர்களும்80 -ம் ஆண்டு உடைகளில் வந்து அசத்தினர்” இவ்வாறு ஸ்ரீஷா அந்த நிகழ்ச்சி குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.