Home நாடு அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் கருத்துக்காக இராஜரத்தினம் மீது குற்றச்சாட்டு

அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் கருத்துக்காக இராஜரத்தினம் மீது குற்றச்சாட்டு

633
0
SHARE
Ad

A.Rajarathnamசுங்கைப்பட்டாணி, அக்டோபர் 3 – தாங்கள் வெளியிடும் கருத்துகளின் தொடர்பில், குற்றவியல் சட்டத்தின் கீழ் பலர் குற்றம் சாட்டப்படுவது தொடர்கதையாகி வருகின்றது.

அந்த வகையில், அரசு சார்பற்ற இயக்கமான மலேசிய இந்தியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவரான ஏ.இராஜரத்தினம், தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் இந்திய முஸ்லீம்களைப் பற்றியும், அவர்கள் சார்ந்துள்ள கிம்மா என்ற அரசியல் கட்சி தொடர்பாகவும் பதிவு செய்துள்ள கருத்துகள் தொடர்பாக நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

கோலாலம்பூரில் உள்ள கோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றில் இந்த குற்றத்தை கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக, அவர் மீது சுங்கைப்பட்டாணியில் காவல் துறை புகார் ஒன்று செய்யப்பட்டிருந்தது. அதன் காரணமாக, அவர் சுங்கைப்பட்டாணி கீழ்நிலை அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றார்.

தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து 52 வயதான இராஜரத்தினம் விசாரணை கோரியுள்ளார்.

மலேசிய குற்றவியல் சட்டம் (Penal Code) 504வது பிரிவின் கீழ் இராஜரத்தினம் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பிறரை அவமதிக்கும் வகையிலும், நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கிலும் அவர் தனது கருத்துகளைப் பதிவு செய்தததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அதிக பட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அம்பாங், சிலாங்கூரைச் சேர்ந்த இராஜரத்தினம், 1998ஆம் ஆண்டின் தொடர்பு, பல்ஊடக சட்டத்தின் பிரிவு 233 (1) (a) –இன் படி மற்றொரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்கியுள்ளார்.

இந்த சட்டத்தின் படி, இணையத் தொடர்பு வசதிகளைத் தவறுதலாகப் பயன்படுத்தி, மற்றொரு நபரை இழிவுபடுத்தும், நிந்தனை செய்யும், தொந்தரவு செய்யும் குற்றச் செயலை அவர் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் படி அதிக பட்சமாக 50,000 ரிங்கிட் அபராதமும், ஒரு வருட சிறைத் தண்டனையும் அல்லது இரண்டும் விதிக்கப்பட முடியும்.

இராஜரத்தினத்தின் வழக்கறிஞராக டத்தோ எஸ்.கணேசன் பிரதிநிதித்தார்.

4,000 ரிங்கிட் ஜாமீனில் இராஜரத்தினம் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கு எதிர்வரும் நவம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.