Home கலை உலகம் இந்தித் திரையுலகில் உருவத்தாலும், திறமையாலும் “உயர்ந்தவர்” – அமிதாப் பச்சான் 72 வயதைக் கடக்கின்றார்.

இந்தித் திரையுலகில் உருவத்தாலும், திறமையாலும் “உயர்ந்தவர்” – அமிதாப் பச்சான் 72 வயதைக் கடக்கின்றார்.

733
0
SHARE
Ad

amithabachanஅக்டோபர் 11 – இந்தித் திரையுலகை வாசலாகக் கொண்டு நுழைந்தாலும், தனது ஆற்றலாலும், திறமையாலும், வித்தியாசமான நடிப்பாலும், தனித்து நிற்பதோடு, இந்தியத் திரைப்பட உலகின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவராக இன்றைக்கு ‘உயர்ந்தும்’ நிற்பவர் அமிதாப் பச்சான்.

அவருக்கு இன்று வயது 72!

ஆனால், இளமையிலும், துடிப்பிலும், சளைக்காமல், இன்றும் தொடர்ந்து நடித்து வருவதிலும் அவருக்கு இணையான ஒரு நடிகரை நம்மால் இந்தியத் திரையுலகில் காண இயலவில்லை.

#TamilSchoolmychoice

1970ஆம் ஆண்டுகளில், இந்திக் கதாநாயகர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற இலக்கணத்தோடு வலம் வந்து கொண்டிருந்த ராஜ்கபூர், சுனில் தத், ராஜேந்திரகுமார், தேவ் ஆனந்த் போன்றவர்களுக்கு மத்தியில் வித்தியாசமான தோற்றத்தோடு, நெற்றியில் புரளும் முடி அழகோடு, உள்ளே நுழைந்து கலக்கியவர் அமிதாப்.

முதலில் புறக்கணிக்கப்பட்டவர் – பின்னர் கவனிக்கப்பட்டவர்

முதலில் அவரது அதிகப்படியான உயரமும், நீளவாட்ட முகமும், சற்றே மாநிறமான உடல் நிறமும், இந்திப் பட இயக்குநர்களை அவ்வளவாகக் கவரவில்லை.

இருப்பினும், எந்தவித சினிமா பின்புலமும், குடும்பப் பின்னணியும் இல்லாமல் திரையுலகில் முட்டி மோதி வெற்றி மாலைகளைச் சூடிக் கொண்டவர் அமிதாப்.

Young Amitabh Bachan

இளவயது அமிதாப்…

ஓரிரு படங்களில் தலைகாட்டி, தனது உருவத்தை இந்திப்படங்களில் அவர் பதிவு செய்தபோது, இரசிகர்கள் அவரைக் கைதட்டி வரவேற்றார்கள்.

ஆக்ரோஷமான, ஆத்திரக்கார இளைஞனாக டீவார், சஞ்சீர் போன்ற படங்களில் அவரைக்  காட்டியபின் அவர் மீதிலான ஆதரவும், அவரது பிரபலமும் பன்மடங்கு உயர்ந்தது.

சமூக அநீதிகளைக் கண்டு குமுறும், போராடும் ஆத்திரக்கார இளைஞன் பாத்திரத்திற்கு, அவரை விட்டால் ஆள் இல்லை என்னும் அளவுக்கு படங்கள் வரிசையாக வரத் தொடங்கின.

ஷோலே போன்ற படங்கள் அவரைப் புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றன.

‘கூலி’ படத்தின் போது சண்டைக் காட்சி ஒன்றில் நடிக்கும் போது வயிற்றில் அடிபட்டு, மருத்துவமனையில் உயிருக்குப் போராடி, சிறந்த மருத்துவ கவனிப்பாலும், இந்திய மக்களின் பிரார்த்தனைகளாலும் மீண்டு வந்தவர் அமிதாப்.

வணிகத்தில் சறுக்கல்

Amitabh-Bachchanபுகழின் உச்சத்திற்கு போன அவருக்கும் ஒரு காலகட்டத்தில் அடி சறுக்கியது.

திரையுலகில் சம்பாதித்த பெரும் பணத்தைக் கொண்டு தகவல் ஊடக நிறுவனம் ஒன்றைத் தோற்றுவித்து, வணிகத்தில் ஈடுபட்ட அவரது வணிக முயற்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியுற, பண ரீதியாக படு பாதாளத்தில் வீழ்ந்தார் அமிதாப்.

தமிழில் கூட ‘உல்லாசம்’ என்ற படத்தை, அஜித், விக்ரம் நடிப்பில், அவரது ஏபிசிஎல் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

உலக அழகிப் போட்டியை இந்தியாவில் நடத்தும் முயற்சிகள் காரணமாக, கணிசமான நஷ்டத்தை அடைந்தார் அமிதாப்.

வங்கிகள் அவரை கடன்களின் பாக்கிக்காக நெருக்கத் தொடங்கின. அவரது வீடே ஏலத்திற்கு வரும் நிலைமையும் உருவாகியது.

அந்த நேரத்தில்தான், இன்றைய அம்பானி சகோதரர்களின் தந்தையார், திருபாய் அம்பானியின் உதவியை – அவரது வழிகாட்டலை – அமிதாப் நாடினார் என்றும், அம்பானி வரைந்து கொடுத்த வியூகத்தின்படி பிரச்சனைகளை எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டார் என்றும் கூறுகின்றார்கள்.

அந்த நேரத்தில்தான், ‘ரியலிடி’ நிகழ்ச்சிகள் என்ற பெயரில் – உண்மையான நேரடி நிகழ்வுகள் தொலைக்காட்சியில் புகழ் பெறத் தொடங்கின.

ஸ்டார் தொலைக்காட்சியின் கேள்வி பதில் நிகழ்ச்சியை பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்பட, ஆங்கிலமும் நன்கு தெரிந்த – அகில இந்திய அளவில் பிரபலமான நடிகர் ஒருவர் தேவைப்பட – அந்தப் பாத்திரத்திற்கு பாந்தமாகப் பொருந்தினார் அமிதாப்.

மீண்டும் உச்சத்திற்கு சென்ற அமிதாப்பின் புகழ்…

அப்போது முதல், அவரது தொழில் முன்னேற்றமும் மீண்டும் மேல் நோக்கி நகரத் தொடங்கியது. நிகழ்ச்சி பிரபலமாகவே, ஸ்டார் தொலைக்காட்சி தொடர்ந்து அமிதாப்பை வைத்து ‘நீங்களும் கோடீஸ்வரராகலாம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் கோடிகளைக் குவிக்க, அந்த கோடிகளில் ஒரு பகுதி அமிதாப்பின் வீட்டு கல்லாப் பெட்டியையும் நிரப்பியது.

அதே வேளையில், அவரது வயதுக்கேற்ற பாத்திரங்களில் அவரை மீண்டும் நடிக்க வைக்க சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது இந்தித் திரையுலகம்.

தனது சளைக்காத போராட்ட குணத்தாலும், கடுமையான உழைப்பாலும், உயர்ந்த அமிதாப், இன்றும் சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களுக்கும், முன்னணி கதாநாயகர்களுக்கும் ஓர் ஆதர்ச மனிதராக – வழிகாட்டலாகப் போற்றப்படுகின்றார்.

இடையில் அரசியல் ஆசையினால், தனது இளமைக்கால நண்பர் ராஜீவ் காந்தியுடன் இணைந்தவர், அங்கும் சில தோல்விகள், கசப்புணர்வுகள், பேபோர்ஸ் பீரங்கி ஊழல் என பல விவகாரங்களில் சிக்கி,

பின்னர், ‘ஆளை விடுங்கப்பா’ என்று மீண்டும் தனக்குத் தெரிந்த நடிப்புத் தொழிலுக்கே திரும்பினார்.

இப்படியாக, பல்வேறு முனைகளில் அவர் வாழ்க்கையில் சந்தித்த பாடங்கள், படிப்பினைகள் மற்றவர்களும் கண்டுணர்ந்து பின்பற்றப்படக் கூடிய சம்பவங்களாக மக்களால் நினைத்துப் பார்க்கப்படுகின்றது.

ரஜினியும் அமிதாப்பும்…

Amitabh-Bachchan and Rajni“அந்தா கானுன்” என்ற படத்தில் இணைந்து நடித்தது முதல் அமிதாப்பின் நெருக்கமான நண்பராக மாறியவர் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

“நீங்கள் பல பிரச்சனைகளிலிருந்து மீண்டிருக்கின்றீர்கள். அது எப்படி முடிந்தது? அந்த வெற்றியின் இரகசியம் என்ன?” என ஒருமுறை ரஜினி அமிதாப்பைக் கேட்டாராம்!

அதற்கு அமிதாப் “என் தந்தை எனக்கு சொல்லிக் கொடுத்த ஒரே ஒரு வாசகத்தை நான் விடாமல் பின்பற்றினேன். ‘சூரியனைத் தொடர்ந்து செல்’ – Follow the sun – என்ற வாசகம்தான் அது. அதாவது, உனக்கு என்ன பிரச்சனைகள் வந்தாலும், சூரிய உதயத்துக்கு முன் எழுந்துவிடு. சூரியன் மறையும் வரை உழைத்துக் கொண்டிரு. எந்தப் பிரச்சனையில் இருந்தும் மீண்டு விடுவாய் என என் தந்தை எனக்குச் சொல்லிக் கொடுத்ததை எப்போதும் பின்பற்றினேன். அது ஒன்றுதான் எனது வெற்றிக்குக் காரணம் என கருதுகின்றேன்” என அமிதாப் ரஜினியிடம் கூறினாராம்.

இன்றைக்கு அவரது மகனும் நடிக்க வந்துவிட்டார். உலகப் பேரழகி மருமகளாகிவிட்டார். பேரப்பிள்ளைகளால் வீடு நிறைந்து விட்டது. மனைவி ஜெயா பாதுரியின் அன்பான அரவணைப்பும் கவனிப்பும் உண்டு.

வயதும் 72 ஆகிவிட்டது. இருப்பினும் இன்னும் விடாமல் நடித்துக் கொண்டு இருக்கின்றார். உழைத்துக் கொண்டிருக்கின்றார். அவரை வைத்து நிறைய விளம்பரப் படங்களும் இன்னும் எடுக்கப்படுகின்றன.

Shamitabh,,

நமது தமிழ்நாட்டு நடிகர் தனுஷ், கமல் மகள் அக்‌ஷரா ஆகியோருடன் அமிதாப்  நடிக்கும், பிரபல இயக்குநர் பால்கியின் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுத் தயாராக நிற்கின்றது அமிதாப்பின் அடுத்த படமான ‘ஷாமிதாப்’.

72 வயது நிறைவைக் கொண்டாடும் அமிதாப், வெறும் சினிமா நடிகராக மட்டும் அல்லாமல்,

உழைப்பையும் – திறமையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு முன்னேறிய விதத்தில் நமக்கெல்லாம் ஒரு பாடமாக, நாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய சம்பவங்களைக் கொண்ட வாழ்க்கையைக் கொண்டவராக திகழ்கின்றார்.

-இரா.முத்தரசன்