பெய்ஜிங், நவம்பர் 11 – பெய்ஜிங்கில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆசிய கடல் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் குறித்து தனது கருத்தினை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது தொடர்பான ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று பெய்ஜிங் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு இராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
இந்நிலையில், ஆசிய பசிபிக் மாநாட்டில் பொருளாதார மேம்பாடுகள் குறித்த பேச்சுவார்த்தை மட்டுமின்றி, ஆசிய கடல் பகுதிகளில் சீனா தொடர்ந்து வரும் ஆதிக்கப் போக்கு குறித்தும் தனது கருத்தினை அவர் எடுத்துரைப்பார் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீனா ஆசிய கடல்பகுதிகளில் செலுத்தி வரும் ஆதிக்கம் காரணமாக ஜப்பான், வியட்நாம் உள்ளிட்ட அண்டைநாடுகளுடன் சுமூக உறவு ஏற்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.