இந்தோனேசியா, டிசம்பர் 16 – இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நேற்று 56 ஆக உயர்ந்தது. இன்னும் 82 பேரை அங்கு காணவில்லை.
மத்திய ஜாவா மாகாணம், பங்சர்நெக்ரா மாவட்டம், ஜெம்பிளங் என்ற கிராமத்தில், கன மழையை தொடர்ந்து இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார், ராணுவ வீரர்கள், தன்னார்வலர்கள் என சுமார் 1,250 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அங்கு சனிக்கிழமை வரை 20 பேரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மேலும் 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதுவரை 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த 577 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
மீட்புப் பணியில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சாலைகளும் சேதமடைந்ததால் அங்கு கனரக இயந்திரங்களை கொண்டுசெல்ல முடியவில்லை. இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அங்கு ஆட்களை கொண்டே மீட்புப் பணி நடைபெற்றது.
இந்நிலையில் மீட்புப் பணி சவாலாக இருப்பதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். இங்கு மண் உதிரியாகவும் சேறும் சகதியுமாக உள்ளது. தோண்டும்போது மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் கவனமுடன் பணியாற்ற வேண்டியுள்ளது என்று அவர்கள் கூறினர்.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ நேற்று பங்சர்நெக்ரா சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தோனேசியாவில் மழைக்காலங்களில், கனமழை, வெள்ளம், நிலச்சரிவு ஏற்படுவது வழக்கமானது.
இந்நாட்டில் 25 கோடி மக்கள் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பதாக தேசிய பேரிடர் மீட்பு முகமை அறிவித்துள்ளது. நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை பேரிடர்களாலும் இந்தோனேசிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.