ஜகர்த்தா, டிசம்பர் 2– இந்தோனேசியாவில் கிழக்கு பகுதியில் நேற்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மலுரு மாகாணத்தில் உள்ள சவுமலாகி என்ற கடற்கரை நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பூமி குலுங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
அங்கு 6.3 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது. நிலநடுக்கம் காரணமாக மிக உயரமான அலைகள் எழும்பின.
இந்நிலையில், தீக்குழம்புகளை கக்கிக்கொண்டிருக்கும் சிபைங்க் எரிமலையின் அருகேயுள்ள குடலிங் கிராமத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் அப்பகுதியில் உள்ள சில வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலியானதாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.