கொழும்பு, டிசம்பர் 16 – இலங்கையின் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் ஆளும் கட்சி தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சிறைக் கைதிகளையும் பயன்படுத்துவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
கஃபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று இயக்குநரான கீர்த்தி தென்னெக்கோன் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று நேற்று மாத்தறை கம்புறுப்பிட்டிய பகுதியில் நடந்தது.
இதில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக காலி சிறைச்சாலையில் இருக்கும் 44 கைதிகள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சாரக் கூட்டத்தை சிறைச்சாலை அமைச்சர் சந்திரசிறி கஜதீரவே தலைமையேற்று நடத்தியதாகவும் கீர்த்தி தென்னக்கோன் கூறியுள்ளார்.
இதன் மூலம் தேர்தல் சட்டங்கள் மாத்திரமல்லாமல், சிறைக் கைதிகள் குறித்த அனைத்துலக சட்டங்களும் மீறப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், அந்தக் கூட்டத்துக்காக சிறைச்சாலைகள் துறைக்கு சொந்தமான வாகனங்களும், ஏனைய உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக தேர்தல் ஆணையருக்கு முறையிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.