Home நாடு டி.மோகன் குழுவினரை பழனிவேல் புதன்கிழமை சந்திக்கின்றாரா?

டி.மோகன் குழுவினரை பழனிவேல் புதன்கிழமை சந்திக்கின்றாரா?

584
0
SHARE
Ad

G-Palanivel1-200813_840_604_100கோலாலம்பூர், டிசம்பர் 16 – மஇகாவில் சங்கப் பதிவதிகாரி உத்தரவு குறித்து சட்ட சிக்கல்கள் நீடித்து வரும் சூழலில், மறுதேர்தலுக்காக போராடி வந்த முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகனின் குழுவினரை சந்திக்க மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அந்தச் சந்திப்பு நாளை புதன்கிழமை நண்பகலில் பழனிவேலுவின் அமைச்சு அலுவலகத்தில் நடைபெறக் கூடும் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சியின் நலனுக்காக நாங்கள் போராடி வருகின்றோம் என்றும், பழனிவேலுவைச் சந்திக்க நாங்கள் தயார் என்றும் டி.மோகன் இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர்களைச் சந்திக்க பழனிவேல் ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், கட்சியில் அமைதியை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக – தனக்கு எதிராக எழுந்து வரும் எதிர்ப்புக் குரல்களை சமாளிக்கும் விதமாக -பழனிவேல் இந்த அமைதிப் பேச்சுவார்த்தை குறித்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் எதிர்வரும் வியாழக்கிழமை மஇகா மத்திய செயலவைக்கான கூட்டம் நடைபெறும் என்றும் பழனிவேல் அறிவித்திருக்கின்றார்.

சங்கப் பதிவகம் எந்த மஇகா தேர்தல் செல்லாது என அறிவித்துள்ளதோ அதே தேர்தலின் வழி தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவை உறுப்பினர்களைக் கொண்டு எதிர்வரும் வியாழக்கிழமை மத்திய செயலவைக்கான கூட்டம் நடைபெறவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறும்போது மோகன் குழுவினரின் ஆர்ப்பாட்டங்களோ, எதிர்ப்புகளோ நடைபெறக் கூடாது என்ற வியூகத்தோடும் –  அவற்றை முன்கூட்டியே சமாளிக்கும் விதமாகத்தான் – மோகன் குழுவினரை நேரடியாக சந்தித்து அவர்களின் கொந்தளிப்பை சமாளிக்கும் விதமாகத்தான் – இந்த சந்திப்பை பழனிவேல் நடத்துகின்றார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நாளை பழனிவேலுவைச் சந்திக்கும் குழுவிற்கு டி.மோகன் தலைமை தாங்கிச்செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அம்பாங் டத்தோ முனியாண்டி, மது மாரிமுத்து, செனட்டர் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், செனட்டர் டத்தோ ஜஸ்பால் சிங் ஆகியோர் ஒரு குழுவாக டி.மோகனோடு இணைந்து  பழனிவேலுவைச் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் சங்கப் பதிவதிகாரியிடம் தேர்தலுக்கு எதிராக புகார் செய்து தொடர்ந்து மறு தேர்தலுக்காக  போராடி வந்தவர்களாவர்.

மற்ற மாநிலங்களிலிருந்து மற்ற தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்களா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.