புது டெல்லி, டிசம்பர் 29 – கிங்பிஷர் ஏர்லைன்ஸின் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுவரை கிங்பிஷர் நிறுவனம், அது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பினையும் வெளியிடாததால், அந்நிறுவனம் மூடப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது.
இந்தியாவின் மிக முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவரான விஜய் மல்லையாவிற்குச் சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ், போதுமான நிதிநிலையை நிரூபிக்கத் தவறியதால், விமானப் போக்குவரத்துத் இயக்குனரகம், கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 31-ம் தேதி, அந்நிறுவனத்தின் விமான போக்குவரத்திற்கான உரிமத்தை ரத்து செய்தது.
எனினும், ரத்தான உரிமத்தை புதுப்பிக்க விமானப் போக்குவரத்துத் இயக்குனரகம், இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுத்தது. எனினும், புதுப்பித்தல் தொடர்பாக கிங்பிஷர், இதுவரை எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
இது தொடர்பாக விமானப் போக்குவரத்துத் இயக்குனரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானங்களை இயக்க வேண்டுமெனில், விமானப் போக்குவரத்து இயக்குனரகத்திற்கு போதுமான நிதிநிலைகளையும், ஆதாரங்களையும் கொடுக்கவேண்டும். எனினும், அதற்கான கால அவகாசம், டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது” என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட கிங்பிஷர் ஏர்லைன்ஸ், 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் ஒரு விமானத்தைக் கூட இயக்கவில்லை. நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரி நிறுவன ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொண்டதால், கிங்பிஷர் நிறுவன விமான சேவை அன்று முதல் முற்றிலும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.