கோலாலம்பூர், ஜனவரி 27 – தன் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்கும் என நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
ஓரினப் புணர்ச்சி வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது கூட்டரசு நீதிமன்றம்.
“எனது சட்டக்குழு முன்வைத்த வாதங்களின் அடிப்படையில் பார்க்கும்போது நான் விடுவிக்கப்படுவேன் என உறுதியாக நம்புகிறேன். சட்டக் கொள்கைகள் மற்றும் எனது சட்டக்குழு நீதிமன்றத்தில் முன்வைத்த மிக விரிவான ஆதாரங்கள் ஆகியவை இந்த நம்பிக்கையை தந்துள்ளன. அரசியல் குத்துச்சண்டைக் களத்தில், அவதூறுகள் சுமத்துவதை ஒரு கருவியாக பயன்படுத்த கூடாது,” என தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் அன்வார்.
அன்வார் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு ஓராண்டுக்கும் மேற்பட்ட சிறைத்தண்டனையோ, அல்லது 2 ஆயிரம் வெள்ளிக்கும் அதிகமான அபராதமோ விதிக்கப்படும் பட்சத்தில் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார்.
கடந்த மார்ச் 7ஆம் தேதி மேல் முறையீட்டு நீதிமன்றம் தனக்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார் அன்வார்.
இந்த முறையீடு தொடர்பான விசாரணை கடந்த ஆண்டு அக்டோபர் 28 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை 8 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.