இது குறித்து நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சிவசுப்ரமணியம், கட்சித் தலைமையகத்தில் டத்தோ குமார் அம்மான் பொறுப்பேற்றது முதல் புதிய பாதுகாப்பு முறை அமலில் இருப்பது அனைவருக்கும் தெரியும் என்றும், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தான் உறுப்பினர்கள் தலைமையகத்திற்கு வர முடியும் என்றும் சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.
தலைமையகத்தில் நேற்று காலையில் டத்தோ சரவணனுக்கு ஆதரவாக நிறைய தொண்டர்கள் கூடப் போவதாக வாட்ஸ் அப் போன்ற ஊடகங்களில் வந்த பல்வேறு தகவல்களைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது என்றும் சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.
பாதுகாப்பு கருதி தொண்டர்களைத் தடுத்து நிறுத்தியவர்கள் ஏன் மகளிர் பிரிவுத் தலைவி மோகனா முனியாண்டியை தடுத்தார்கள்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சிவசுப்ரமணியம், “மோகனா என்ன அகோங்கா (மன்னரா) எல்லோரும் தெரிந்து வைத்திருக்க? பாதுகாவலர்களுக்கு அவரைத் தெரியாமல் இருக்கலாம். அதனால் தடுத்திருப்பார்கள்” என்று பதிலளித்தார்.
இளைஞர் பிரிவின் கட்டுப்பாட்டில் கட்சி தலைமையகம்
நேற்றைய கட்சித் தலைமையகத்தில் நிலவிய குழப்பங்கள் மற்றும் வாக்குவாதங்கள் காரணமாக, இனி மஇகா விவகாரங்கள் தீர்க்கப்படும் வரை கட்சித் தலைமையகம் மஇகா தேசிய இளைஞர் பிரிவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று டத்தோ சரவணன் அறிவித்தார்.
“தற்போது, மஇகா-வில் தேசியத் தலைவர், துணைத் தலைவர், இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுத் தலைவர்கள் ஆகியோரின் தேர்தல் முடிவுகளை மட்டுமே ஆர்ஓஎஸ் (சங்கங்களின் பதிவிலாகா) அங்கீகரித்துள்ளது. தலைமைச் செயலாளர் பதவி சட்டவிரோதமாகக் கருதப்படுவதால் அவரின் கட்டுப்பாட்டில் கட்சித் தலைமையகம் இருப்பதற்கு அதிகாரம் இல்லை. எனவே இளைஞர் பகுதி தலைமையகத்தைப் பாதுகாக்கும்” என்று சரவணன் மேலும் கூறினார்.