லண்டன், பிப்ரவரி 17 – நெதர்லாந்தைச் சேர்ந்த ‘மார்ஸ் ஒன்’ என்ற அரசு சாரா நிறுவனம், வரும் 2024-ம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமாக மனிதர்களை தங்க வைக்க திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்தப் பயணத்துக்கு சுமார் 202,586 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களுக்கு பலகட்ட சோதனைகள் நடத்தப்பட்ட பிறகு, தற்போது 50 ஆண்கள், 50 பெண்கள் என மொத்தம் 100 பேரை “மார்ஸ் ஒன்’ தேர்வுக் குழுவினர் அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்த 100 பேரில் அமெரிக்காவிலிருந்து 39 பேரும், ஐரோப்பாவில் 31 பேரும் தேர்வாகியுள்ளனர். அவர்களில் மூன்று பேர் இந்தியர்கள் ஆவர். இறுதியாகத் தேர்வாகும் 40 பேர், சுமார் 7 ஆண்டுகள் பயிற்சி கொடுக்கப்பட்டு, செவ்வாய்க்கு அனுப்பப்பட உள்ளனர்.
தேர்வாகியுள்ள மூன்று இந்தியர்களில் தரண்ஜீத் சிங் (வயது 29) ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் படித்து வருகிறார். ஷிரதா பிரசாத் (வயது 19) கேரளாவைச் சேர்ந்தவர். ரித்திகா சிங் (29) துபாயில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.