பெங்களூரு, செப்டம்பர் 26 – “உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறது. பத்தாம் இடத்திற்கு வருகின்றது” என்றெல்லாம் சோதிடப் புலிகளால் ஆராயப்பட்ட செவ்வாய்க் கிரகம் எப்படி இருக்கின்றது என்பதைக் காண நேரடியாகவே புறப்பட்டுச் சென்று விட்டது இந்திய விஞ்ஞானிகளால் ஏவி விடப்பட்ட மங்கள்யான் விண்கலம்.
மங்கள்யான் விண்கலம் எடுத்து அனுப்பியிருக்கும் அற்புதமான படங்களை பெங்களூரிலுள்ள இஸ்ரோ எனப்படும் இந்திய வான்வெளி ஆய்வுக் கழகத்தின் விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகின்றார்கள். அவற்றில் சில இங்கே:-
நேற்று வெளியிடப்பட்ட இந்தப் படம் செவ்வாய்க் கிரகத்திலிருந்து பார்த்தால் தெரியும் பூமியின் தோற்றம். கடந்த 19 நவம்பர் 2013இல் மங்கள்யான் 67,975 கிலோமீட்டர் உயரத்தில் எடுத்த புகைப்படம் இது.
கடந்த 24 செப்டம்பர் 2014இல் மங்கள்யான் செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்ததைத் தொடர்ந்து செவ்வாய்க் கிரகத்தில் ஆராய்ச்சிக்காக களமிறங்கும் முதல் ஆசிய நாடாகவும், வெகுசில உலக நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன் அமெரிக்கா, ஐரோப்பா ஒன்றியம், ரஷியா ஆகிய நாடுகள் மட்டுமே இந்த சாதனைத் திட்டத்தில் நுழைந்து வெற்றி கண்டுள்ளன.
இஸ்ரோ நேற்று வெளியிட்ட இந்தப் படம் மங்கள்யான் எடுத்த முதல் செவ்வாய்க் கிரக படமாகும். 7,300 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து செவ்வாய்க் கிரகத்தை நோக்கி எடுக்கப்பட்டது இந்தப் படம்.
படங்கள்: EPA