Home நாடு எம்எச் 370 பயணிகளின் வங்கிக் கணக்கில் மோசடி- தம்பதியர் மீது டிசம்பர் 17 விசாரணை

எம்எச் 370 பயணிகளின் வங்கிக் கணக்கில் மோசடி- தம்பதியர் மீது டிசம்பர் 17 விசாரணை

802
0
SHARE
Ad

MH370கோலாலம்பூர், செப்டம்பர் 26 – எம்எச் 370 பேரிடரில் பலியான 4 பயணிகளின் வங்கிக் கணக்கில் இருந்து முறைகேடாக பணம் எடுத்த வங்கி அதிகாரி மற்றும் அவரது கணவர் மீது டிசம்பர் 17 முதல் விசாரணை நடைபெறும் என கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் (செஷன்ஸ்) அறிவித்துள்ளது.

அந்த 4 பயணிகளின் வங்கிக் கணக்கில் இருந்து அத்தம்பதியர் வெ.85,180 தொகையை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நூர் ஷிலா கனன் (33 வயது) மற்றும் அவரது கணவர்  பஷீர் அகமட் மௌலா சாகுல் அமீட் (33 வயது) ஆகிய இருவரும் தங்களுக்கென வாதாட உம்மி அலிசா காதிர் என்ற வழக்கறிஞரை புதன்கிழமை நியமித்துள்ள நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி நோர்ஷாரிடா அவாங் விசாரணைத் தேதியை வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஹீ புய் ஹெங் என்ற மலேசியரின் வங்கிக் கணக்கில் இருந்து வெ.40,000 தொகையை சீனாவைச் சேர்ந்த டியான் ஜுன் வெய் என்பவரின் கணக்கிற்கும், வெ.35,000
தொகையை அலி ஃபரான் கான் என்பவரின் கணக்கிற்கும் முறைகேடாக மாற்றியதாக
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நூர் ஷிலா ஏற்க
மறுத்தார்.

மேலும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது மற்றும் எம்எச் 370 பணியாளருடையது
உள்ளிட்ட இரு வங்கிக் கணக்குகளில் இருந்து வெ.2530 திருடியது ஆகிய  குற்றச் சாட்டுகளையும் நூர் ஷிலா எதிர்கொண்டுள்ளார்.

இதைத் தவிர 4 பயணிகளின் வங்கிப் பணத்தை திருடியது தொடர்பான 4 வெவ்வேறு
குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொள்ள மறுத்துள்ளார்.

இதற்கிடையே பஷீர் அகமட் மௌலாவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்க
மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லெபோ அம்பாங்கில் உள்ள எச்எஸ்பிசி வங்கிக் கிளையில், கடந்த மே 14 முதல் ஜூலை 8 வரையிலான காலகட்டத்திற்குள் மேற்குறிப்பிட்ட குற்றச்செயல்களைப் புரிந்ததாக நூர் ஷிலா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதேபோல் அவரது கணவர் மே 15ஆம் தேதி அம்பாங்கில் உள்ள அவ்வங்கியின் ஏடிஎம்
இயந்திரத்தில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.