கோலாலம்பூர், மே 21 – மாயமான எம்எச்370 விமானப் பயணிகளின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 77,500 ரிங்கிட் வரை வேறு ஒரு வங்கிக் கணக்கிற்குத் திருட்டுத்தனமாகப் பணப் பரிமாற்றம் செய்த முன்னாள் வங்கி ஊழியருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நூர் ஷீலா கனான் (வயது 34) என்ற அந்தப் பெண் தனது கணவருடன் சேர்ந்து இந்தக் குற்றங்களைப் புரிந்ததை ஒப்புக்கொண்டதால், அவருக்கு அமர்வு நீதிமன்ற நீதிபதி நோர்ஷாரிதா ஆவாங், இந்தத் தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்தார்.
எம்எச்370 விமானப் பயணியான சீன நாட்டைச் சேர்ந்த தியான் ஜுன் வெய்யின் பற்று அட்டை மற்றும் பண அட்டை ஆகியவற்றில் இருந்து 7,650 ரிங்கிட் திருடியதாக, நூர் ஷீலாவின் கணவரும், கார் பழுது பார்ப்பவருமான பஷீர் அகமட் மௌலா சாஹுல் ஹமீட் மீது ஏப்ரல் 28-ம் தேதி, குற்றம் நிரூபிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று அவருக்கு நீதிபதி நோர்ஷாரிதா ஆவாங், 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 3 பிரம்படிகளும் விதித்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.