கோலாலம்பூர், மே 20 – மாயமான எம்எச்370 விமானப் பயணிகளின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைத் திருடிய தம்பதியரில், கணவருக்கு 4 வருட சிறைத் தண்டனையும், 3 பிரம்படிகளும் விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மனைவி உடல்நலக்குறைவால் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்பதால் அவருக்கு தீர்ப்பு நாளை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எம்எச்370 விமானப் பயணியான சீன நாட்டைச் சேர்ந்த தியான் ஜுன் வெய்யின் பற்று அட்டை மற்றும் பண அட்டை ஆகியவற்றில் இருந்து 7,650 ரிங்கிட் திருடியதாக, மெக்கானிக்கான பஷீர் அகமட் மௌலா சாஹுல் ஹமீட் மீது ஏப்ரல் 28-ம் தேதி, குற்றம் நிரூபிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நீதிபதி நோர்ஷாரிதா ஆவாங், பஷீருக்கு இன்று 4 வருட சிறைத் தண்டனையும், 3 பிரம்படிகளும் விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், பஷீரின் மனைவியும், வங்கி அதிகாரியுமான நூர் ஷீலா கனான், வயிற்றுப் போக்கு காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராக இயலாத காரணத்தால், அவருக்கு கைதாணை பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி, அவரது தீர்ப்பு இன்றோ நாளையோ வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு, மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை, எச்எஸ்பிசி வங்கியில் இருந்து எம்எச்370 பயணிகள் 4 பேரின் பணத்தை வேறு ஒரு வங்கிக் கணக்கிற்கு 85,180 ரிங்கிட் வரை பரிமாற்றம் செய்ததாக நூர் ஷீலா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.