சிட்னி, ஆகஸ்ட் 20 – ஆழ்கடலில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாயமான எம்எச்370 விமானத்தை தேட திட்டமிருப்பதாகவும், இந்த புதிய தேடல் மூலம் விமானத்தை நிச்சயம் கண்டுபிடித்துவிடலாம் என்றும் ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் இன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து டோனி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “விமானம் விழுந்து நொறுங்கியதாக நம்பப்படும் இடத்தில் சுமார் 60,000 சதுர கிலோமீட்டர் கடற்பரப்பில் இந்த தேடுதல் பணி நடைபெறப்போகிறது” என்று தெரிவித்துள்ளார்.
“ஆஸ்திரேலியாவின் வடக்கே உள்ள கடற்பகுதியில் ஆழ்கடலில் விமானம் விழுந்திருக்க வேண்டும். நாங்கள் கணித்தது போல் விமானம் அங்கு இருந்தால், நிச்சயம் தற்போது பயன்படுத்தவிருக்கும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்” என்று டோனி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அதிகாரிகள் முதல் முறையாக இந்த பேராபத்தான கடற்பகுதியில், புதிய தொழில்நுட்பங்களுடன் தேடுதல் வேட்டை நடத்தப் போகின்றனர் என்றும் டோனி தெரிவித்தார்.
கடந்த மார்ச் 8-ம் தேதி, கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பெய்ஜிங் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370, நடுவானில் ரேடார் தொடர்பில் இருந்து விடுபட்டு மாயமானது.
அனைத்துலக தேடுதல் வேட்டை நடத்தியும் இன்றுவரை விமானம் விழுந்து நொறுங்கியதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.