கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – நேற்று மாலை தலைநகரிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் நடைபெற்ற மஇகா கூட்டரசுப் பிரதேச மாநில பேராளர் மாநாட்டில் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் கலந்து கொள்ளவில்லை.
வழக்கமாக, ஆண்டுக்கொரு முறை நடைபெறும் மஇகா மாநிலப் பேராளர் மாநாடுகளில் கட்சியின் தேசியத் தலைவர் கலந்து கொண்டு உரையாற்றி, மாநாட்டைத் திறந்து வைப்பது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு நடந்து முடிந்த கெடா மாநிலப் பேராளர் மாநாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்த்து விட்ட பழனிவேல், நேற்று மாலை நடைபெற்ற கூட்டரசுப் பிரதேச மாநில மாநாட்டிலும் கலந்து கொள்ளவில்லை.
அவர் நேற்று இந்தியாவில் இருந்தார் என மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநாட்டை கட்சியின் தேசியத் துணைத் தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் திறந்து வைத்து உரையாற்றினார்.
மாநிலத் தலைவர் டத்தோ எம்.சரவணன் இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.
கூட்டரசுப் பிரதேச மாநில மஇகாவின் தலைவரான டத்தோ சரவணனுடன் சுமுக உறவு இல்லை என்ற காரணத்தாலும் பழனிவேல் இந்த மாநாட்டைத் தவிர்த்திருக்கலாம் என்ற கருத்து மஇகா கூட்டரசுப் பிரதேச வட்டாரங்களில் நிலவுகின்றது.
காரணம், கடந்த ஆண்டின் கூட்டரசுப் பிரதேச மஇகா ஆண்டுப் பேராளர் மாநாட்டிலும், பழனிவேல் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஇகாவின் இரண்டு செனட்டர்கள் நியமனத்தில், அவர்களின் பதவிக் காலத்தை மேலும் ஒரு தவணைக்கு நீட்டித்த விவகாரத்தில் மஇகாவில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில், மாநாட்டில் தான் கலந்து கொண்டால், தன்னை நோக்கி கேள்விக் கணைகள் தொடுக்கப்படும் என்ற காரணத்தாலும் அவர் இந்த மாநாட்டைத் தவிர்த்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.