இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 20 – நவாஸ் செரீப், பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி இம்ரான்கான் போராட்டம் நடத்தி வருகிறார்.
அவரது கட்சி தொண்டர்கள் சுமார் 1 லட்சம் பேர் இஸ்லாமாபாத்தில் நாடாளுமன்றம் முன்பு கூடி கோஷங்களை எழுப்பி வருகின்றனர். கூடியிருக்கும் தொண்டர்கள் மத்தியில் இம்ரான்கான் ஆவேசமாக பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,‘‘தற்போது தடையை மீறி நாங்கள் நாடாளுமன்றம் முன்பு கூடியிருக்கிறோம். ஆனால் அதே நேரம் நாடாளுமன்றத்துக்குள் நுழையமாட்டோம்.
இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்க்கும்போது எகிப்தில் புரட்சியின் போது பரபரப்பாக பேசப்பட்ட தக்ரீர் மைதானத்தை மக்கள் மறந்து விடுவார்கள்’’ என்றார். அதைக் கேட்டதும் கூடியிருந்த தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அதை தொடர்ந்து பேசிய அவர், நவாஸ் செரீப் இன்று மாலைக்குள் பதவி விலக வேண்டும் என கெடுவிதித்தார். அவ்வாறு பதவி விலகாவிடில் பிரதமரின் அதிகாரபூர்வ அலுவலக இல்லத்துக்குள் தொண்டர்களும் நானும் நுழைவேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
அதே நேரத்தில் மதகுரு காத்ரியும் தனது தொண்டர்கள் மத்தியில் பேசினார். இம்ரான்கானின் பேரணியில் இளைஞர்கள் திரளாக பங்கேற்றுள்ளனர். காத்ரி பேரணியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர்களும் நாடாளுமன்றம் முன்பு தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது என அவர் உத்தரவிட்டுள்ளார். வன்முறையை தவிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.