இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முன்னெடுப்புகள் தீவிரமடைந்துள்ளன.
தமது கட்சி வெற்றி பெற்றதாக தேர்தலுக்குப் பின்னர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் உரையாற்றியிருந்தார். எனினும் இம்ரான் கானின் கட்சி அடுத்த நிலையில் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் அரசியலில் எப்போதும் தீவிர ஈடுபாடு காட்டி வரும் அந்நாட்டு இராணுவமும் இம்ரான் கான் ஆதரவாளர்களை ஆட்சி அமைக்க விடாமல் தடுத்து, நவாஸ் ஷெரீப்பை பிரதமராக ஆக்க முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. வித்தியாசமான தேர்தல் நடைமுறை கொண்ட இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் பெண்களுக்கும் ஆப்கானிஸ்தான் போல் அல்லாமல் அரசியல் முக்கியத்துவமும் அமைச்சுப் பொறுப்புகளும் வழங்கப்படுகின்றன.
336 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 266 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும். மீதமுள்ள 60 இடங்கள் பெண்களுக்கும் 10 இடங்கள் சிறுபான்மை சமூகத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு தொகுதியில் தேர்தல் இரத்து செய்யப்பட்ட நிலையில் 265 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 102 இடங்களில் வெற்றிபெற்றனர். அதற்கு அடுத்தப்படியாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 73 இடங்களிலும் மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றது.
மற்றவர்கள், 28 இடங்களில் வெற்றிபெற்றனர். தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் கூட்டணி அரசாங்கம் அமைக்க நவாஸ் ஷெரீப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.
நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர். இதன் மூலம் நவாஸ் ஷெரீப்புக்கு ராணுவத்தின் ஆதரவு இருப்பது தெளிவாகியுள்ளது.
ஊழல் வழக்கினால் இலண்டனில் இருந்த நவாஸ் ஷெரீப்புக்கு பிணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பினார்.
இம்ரான் கான் ஆதரவாளர்களை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க நவாஸ் ஷெரீப்பை பிரதமராக ஆக்க ராணுவம் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.