Home உலகம் ஐஎஸ் அமைப்பின் ஒரு நாள் வருமானம் 10 இலட்சம் அமெரிக்க டாலர் – நியூயார்க் டைம்ஸ்...

ஐஎஸ் அமைப்பின் ஒரு நாள் வருமானம் 10 இலட்சம் அமெரிக்க டாலர் – நியூயார்க் டைம்ஸ் தகவல்!

841
0
SHARE
Ad

isis34-600பாக்தாத், மே 21 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மிரட்டிப்  பணம் பறிப்பது, வரி விதித்தல் மூலம் நாள் ஒன்றுக்கு 10 இலட்சம் அமெரிக்க டாலர் சம்பாதிப்பதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தான் இன்று உலகின் சக்திவாய்ந்த மற்றும் பணக்காரத்  தீவிரவாத அமைப்பாக உள்ளது. ஈராக்கில் உள்ள சில எண்ணெய்க் கிணறுகள் அந்த அமைப்பின் பிடியில் உள்ளன.

இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வருமானம் குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மக்களைக்  கடத்தி மிரட்டிப் பணம் பறித்து வருகிறது.

#TamilSchoolmychoice

அவ்வாறு மிரட்டிப்  பணம் பறிப்பது, வரி விதிப்பதன் மூலம் மட்டும் அந்த அமைப்புக்கு நாள் ஒன்றுக்கு 10 இலட்சம் அமெரிக்க டாலர் வருமானம் கிடைக்கிறது. செலவைக் குறைக்க  ஐஎஎஸ்ஐஎஸ்  தீவிரவாதிகள் ராணுவ உபகரணங்களைக் கொள்ளையடிக்கின்றார்கள்.

நிலங்கள், கட்டிடங்களை அபகரிக்கிறார்கள், குறைந்த அளவு ஊதியம் வழங்குகிறார்கள். ஈராக்கின் முக்கிய நகரங்கள் ஐஎஸ்ஐஎஸ் வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வருகின்ற போதிலும், அமெரிக்காத் தலைமையிலான நாடுகள் வான்வெளித் தாக்குதல் நடத்துகின்ற போதிலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் தனது அன்றாடச் செலவுகளைக் கவனித்துக் கொள்ளும் அளவுக்குப் போதிய பணம் உள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றன.

இதனால் தீவிரவாதிகளுக்கு வருமானம் பாதித்தாலும், அவர்கள் எண்ணெய்யை மட்டும் நம்பி இல்லை. அவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் எண்ணெய்யை விற்பனை செய்வதை விடத்  தங்கள் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்கிறார்கள்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு மாதா மாதம் ஏற்படும் பெரிய செலவே உறுப்பினர்களுக்கு ஊதியம் அளிப்பது தான். ஊதியத்திற்கு மட்டும் மாதா மாதம் 31 இலட்சம் முதல் 98 இலட்சம் அமெரிக்க டாலர் வரை செலவாகிறது என ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்தது.