நியூயார்க், செப்டம்பர் 27 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க வருகையை முன்னிட்டு நேற்று நியூயார்க் சென்றடைந்தார்.
அவரை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் எஸ்.ஜெய்சங்கர் வரவேற்றார்.
நியூயார்க் நகரில் அவர் தங்கியிருக்கும் விடுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மோடிக்கு வரவேற்பு வழங்கியதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
வழக்கத்துக்கு மாறாக, தன்னைக் காண வந்தவர்களோடு அளவளாவ மோடியும் தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியே வந்து அவர்களைச் சந்தித்தார்.
அவருக்கு ஆதரவான முழக்கங்கள் ஒலித்த அதே வேளையில், பலர் மோடியுடன் கைகுலுக்கவும், புகைப்படம் எடுத்துக் கொள்ளவும், முண்டியடித்துக் கொண்டு முன்னேற, பாதுகாப்புப் படையினர் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் தேதி வரை அமெரிக்காவில் இருக்கப்போகும் மோடிக்கு, அமெரிக்கத் தலைவர்களுடன் சந்திப்பு, ஐநாவில் உரை, வணிகத் தலைவர்களுடன் சந்திப்பு, அண்டை நாட்டுத் தலைவர்களுடன் சந்திப்பு, பொதுமக்கள் சந்திப்பு என வரிசையாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதுவரை எந்த ஒரு இந்தியத் தலைவருக்கும் இல்லாத வகையில் பிரம்மாண்டமான வரவேற்பு விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஒரு காலத்தில் அமெரிக்காவில் நுழைய அமெரிக்க அரசாங்கத்தால் குடிநுழைவு (விசா) அனுமதி மறுக்கப்பட்ட மோடிக்கு இன்று அதே அமெரிக்கா பிரதமர், என்பதால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் விதி வச மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அந்த வகையில் இந்த அமெரிக்க வருகை மோடிக்கு ஓர் இனிய திருப்பு முனையாகும்.