கோலாலம்பூர், செப்டம்பர் 27 – உலக அளவில் வர்த்தகம் செய்வதற்கு மிகச் சிறந்த நாடுகள் என்ற பட்டியலை உலக வங்கி சமீபத்தில் வெளியிட்டது. அதில் மலேசியாவிற்கு உலக அளவில் ஆறாவது இடம் கிடைத்துள்ளது.
இந்த இடத்தினை தக்கவைத்துக் கொள்ளவும், குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் காணவும் பெரும் முயற்சிகளை நாம் எடுத்தாக வேண்டும் என சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் அமைச்சர் டத்தோ ஹமீம் சமுரி தெரிவித்துள்ளார்.
உலக வங்கி, சமீபத்தில் 2014-ம் ஆண்டில், உலக அளவில் வர்த்தகம் செய்வதற்கும், ஏற்றுமதி இறக்குமதியில் சிறந்த பலனை பெறுவதற்கும் சிறப்பான சட்ட திட்டங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. அவற்றில் மலேசியா உலக அளவில் 6-வது இடத்தினை பெற்றுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் டத்தோ ஹமீம் சமுரி கூறியுள்ளதாவது:- “மலேசியா, வர்த்தகம் செய்ய சிறந்த நாடுகள் பட்டியலில் ஆறாவது இடம் பிடித்துள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும். இதனை தக்க வைத்துக் கொள்ளவும், அவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் காணவும் நாம், நமது சிறப்பான சட்டங்களை கடைபிடிக்க வேண்டும். மேலும், சிறந்த முயற்சிகள், ஊழல் ஒழிப்பு, கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்துவம் ஆகியவற்றை கடைபிடித்தால் விரைவில் நாம் முன்னேற்றம் காணலாம்.”
“வர்த்தகம் தொடர்பான ஆக்கப்பூர்வ முயற்சிகளை நாம் மேற்கொண்டால், நமது தயாரிப்புகள் உலக அளவில் பேசப்படும் தரத்தினை எட்டும். இதுவே நமது நாட்டின் வர்த்தக முன்னேற்றத்திற்கான வழிமுறைகளாகும்” என்று அவர் கூறியுள்ளார்.