Home வணிகம்/தொழில் நுட்பம் குலசேகரன் தலைமையில் இந்தியத் தொழில் முனைவர் உச்ச மாநாடு

குலசேகரன் தலைமையில் இந்தியத் தொழில் முனைவர் உச்ச மாநாடு

1384
0
SHARE
Ad
எம்.குலசேகரன்

கோலாலம்பூர் –  வணிகத் துறையில் ஈடுபட விரும்பும் இந்திய இளைஞர்களுக்கு, அனுபவமிக்க தொழில்முனைவர்கள் வழிகாட்டும் முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தியத் தொழில் முனைவர் மாநாட்டில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் மனித வள அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு எம். குலசேகரன் சிறப்பு பிரமுகராக பங்கேற்க உள்ளார்.

மலேசிய அரசியலரங்கில் சக்தி வாய்ந்த புதிய இந்தியத் தலைவராக பரிணமிக்கத் தொடங்கியிருக்கும்  எம்.குலசேகரன், இந்தியர்களில் அதிகமானோர் தொழில்முனைவர்களாக வெற்றி பெறுவதற்கு அடித்தளமிடும் இந்த மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்துவார்.

மேலும், நாடறிந்த தன்முனைப்பு பேச்சாளர் பேராசிரியர் டாக்டர் காதர் இப்ராஹிம், பிரபல தொழிலதிபர் எஸ்.கே. சுந்தரம், பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரி தோற்றுநர் ராஜசிங்கம் ஆகியோரும் சிறப்புரையாற்றும் இந்த மாநாடு தலைநகர் பிரிக்பீல்ட்ஸில் உள்ள நுண்கலை ஆலய மண்டபத்தில் (டெம்பல் ஆப் பைஃன் ஆர்ட்ஸ்) எதிர்வரும் 10-06-2018 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 8 தொடங்கி மாலை மணி 6 வரை இலவசமாக நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சியில் 10 வகையான விதம் விதமான வணிகங்களில் வெற்றிகரமாக நடைபோட்டு வரும் தொழில் முனைவர்கள், தங்கள் தொழில்துறையில் காணப்படும் வணிக மற்றும் பங்காளித்துவ வாய்ப்புகள் பற்றி விரிவாக விளக்கமளிப்பர்.

புதிதாகத் தொழில்துறையில் ஈடுபட விரும்புவோருக்கும் எந்த தொழிலில் ஈடுபடுவது என்று குழப்பத்தில் இருப்போருக்கும் இந்த மாநாடு ஒரு சிறந்த பதிலை அளிக்கும் என்பது திண்ணம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வணிக முனைவர்களுக்கான நிதியுதவி குறித்தும் இந்நிகழ்ச்சியில் விளக்கமளிக்கப்படும். இந்த மாநாடு தன்முனைப்பு உரைகளோடு நின்றுவிடாமல் தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வழங்கும் நிகழ்ச்சியாக அமையவுள்ளது.

மாநாட்டின் போது மதிய உணவும் வழங்கப்படும்.

சுமார் 800 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படும் இந்த மாநாட்டு அரங்கில் தங்கள் வணிகப் பொருட்களை அறிமுகப்படுத்த விரும்பும் தொழில்முனைவர்களுக்கு தற்காலிக முகப்பிடங்களும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

இந்நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களுக்கும் மற்றும் முன்பதிவுக்கும் 012 2500 232 என்ற எண்களுடன் வாட்ஸ் அப் வழி தொடர்பு கொள்ளலாம் அல்லது www.mitramedia.my என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்.