Home நாடு பேங்க் ராக்யாட் தொழில்முனைவோர் நிதியுதவி 100 மில்லியனாக உயர்வு – ரமணன் அறிவிப்பு

பேங்க் ராக்யாட் தொழில்முனைவோர் நிதியுதவி 100 மில்லியனாக உயர்வு – ரமணன் அறிவிப்பு

71
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பேங்க் ராக்யாட் வங்கி இந்திய தொழில்முனைவோர் நிதியுதவி (BRIEF-i) திட்டத்திற்கு மேலும் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த முயற்சிக்கு இந்திய சமூகத்திலிருந்து கிடைத்த ஊக்கமளிக்கும் பதில் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மொத்த நிதியுதவி 100 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் இதுகுறித்து கூறுகையில், “தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் கண்காணிப்பில் உள்ள பேங்க் ராக்யாட் வங்கியின் இந்த நடவடிக்கை, உள்ளூர் தொழில்முனைவோர்களை, குறிப்பாக இந்திய வணிக சமூகத்தை ஆதரிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

“இது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையின் கீழ் உள்ள மடானி அரசாங்கம், இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு தொடர்ந்து உறுதிப்பாடு கொண்டுள்ளதை நிரூபிக்கிறது. இந்த முயற்சி மேலும் வலுப்படுத்தப்பட்டு, மேலும் பல தொழில்முனைவோர்கள் வளர்ந்து நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடியும் என்று நம்புகிறேன்,” என்று நேற்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) நடைபெற்ற BRIEF-i திட்டத்திற்கான மாதிரி காசோலை வழங்கும் விழாவில் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

2024 ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, BRIEF-i திட்டம் நாடு முழுவதும் 512 தொழில்முனைவோர்களுக்கு RM49 மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளதாக ரமணன் தெரிவித்தார்.

BRIEF-i முயற்சியை மேலும் வலுப்படுத்துவதற்காக, அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பேங்க் ராக்யாட் வங்கியின் ஹலால் ஆலோசனை சேவைகளைத் தொடர்ந்து பெற முடியும், இதன் மூலம் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையிடம் (ஜாகிம்) ஹலால் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது என்று ரமணன் கூறினார்.

ஹலால் சான்றிதழ் மூலம் தங்கள் சந்தையை விரிவுபடுத்த விரும்பும் மேலும் பல தொழில்முனைவோர்கள் இந்த முயற்சியால் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் மலேசியாவில் ஹலால் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

“நாங்கள் யாரையும் ஹலால் சான்றிதழ் பெற வற்புறுத்தவில்லை, ஆனால் இது அவர்களுக்கும் அவர்களின் வணிகத்திற்கும் ஒரு நன்மையாக இருக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

BRIEF-i பற்றிய மேலும் தகவல்களைப் பெற விரும்பும் பொதுமக்கள் www.bankrakyat.com.my அல்லது https://ar2e.bankrakyat.com.my என்ற பேங்க் ராக்யாட் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம். அல்லது எந்த ஒரு பேங்க் ராக்யாட் வணிக வங்கி மையத்திற்கும் சென்று விசாரிக்கலாம்.