கோலாலம்பூர் – மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் கமலா ஷிரின் லக்டிர் நேற்று புதன்கிழமை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
மாமன்னரால் முழுமையான விடுதலை வழங்கப்பட்டதற்கு அன்வாருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அமெரிக்கத் தூதர் அன்வாருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகள் குறித்து விவாதித்தார்.
இதற்கிடையில் நேற்று புதன்கிழமை ஆஸ்திரேலியாவுக்கான தூதர் அண்ட்ரூ கொலட்சிநவ்ஸ்கி (Andrew Goledzinowski) அன்வாரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். நேற்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஒன் வோர்ல்ட் தங்கும் விடுதியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
அரசாங்கத்தில் அதிகாரபூர்வமாக இன்னும் இடம் பெறாவிட்டாலும், ஏறத்தாழ அரசாங்கத்தின் உயர் அமைச்சர் போன்று அன்வாருக்கான பணிகளும் அயல் நாட்டு தூதர்கள், தலைவர்களுடனான சந்திப்புகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
கடந்த சில நாட்களாக மாநிலம் தோறும் சென்று மலாய் சுல்தான்களைச் சந்தித்து விட்டு வந்த அன்வார், செவ்வாய்க்கிழமை இரவு மாமன்னரைச் சந்தித்ததைத் தொடர்ந்து அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக டோமி தோமஸ் நியமிக்கப்படும் விவகாரத்தில் ஏற்பட்டிருந்த முட்டுக் கட்டைகள் நீங்கின.