கோலாலம்பூர் – இயந்திர, தொழில்நுட்ப வளர்ச்சியினூடே வளரும் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது என்பதுபோல இலக்கியத்தின்பால் நாட்டமும் குறைந்தே இருக்கிறது. இந்நிலையில் இளைய சமுதாயத்தினரிடம் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த பெற்றோர், ஆசிரியர், இலக்கியம் சார்ந்த அமைப்புகள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த செயல் திட்டங்கள் அவசியமாக இருக்கிறது.
இதை மனதில் இருத்தி, மலேசியத் தமிழ் பண்பாட்டு இயக்கம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் ஆதரவுடன் நாளை வெள்ளிக்கிழமை ஜூன் 8 முதல் 10 ஜூன் 2018 வரை (மூன்று நாள்கள்) முதலாம் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு ஒன்றை நடத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இம்மாநாட்டின் நோக்கம் ‘நலிந்துவரும் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் புத்துயிரூட்டல்’ என்பதாகும்.

எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகள், தாய்மொழிப் பற்றோடும், இலக்கிய நாட்டமுடனும், பண்பாட்டுச் செழுமையோடும், விழுமியங்களைப் போற்றி வளர வேண்டுமென்பதனைக் கருத்தில் கொண்டு 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இம்மாநாட்டில் படைக்கப்பட உள்ளன.
பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள், சமூக ஆய்வாளர்கள், குழந்தை வளர்ப்பில் நாட்டம் உடையவர்கள் அனைவரைக்கும் இம்மாநாடு பயனளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பதிவு செய்யும் அன்பர்கள் மாநாட்டு நிகழ்ச்சியிலும் அதன் இணை அங்கங்களாக நடைபெறும் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கியக் கலை விழா, கண்காட்சி ஆகியவற்றில் முழுமையாக பங்குபெற முடியும்.
குழந்தை இலக்கியக் கண்காட்சி 9 ஜூன் 2018 (காலை 9 முதல் நண்பகல் 1வரை)
குழந்தை இலக்கியங்கள் தொடர்பான நூல்கள், இத்துறையில் தொண்டாற்றியவர்களின் குறிப்புகள், குழந்தை இலக்கியம் தொடர்பாக மலேசியாவில் இதுவரை பதிப்பிக்கப்பட்ட நூல்கள், வார மாத இதழ்கள் ஆகியவை கண்காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

மேலும், 9 ஜூன் 2018 காலை 9 மணி தொடங்கி நண்பகல் 1 மணிவரை மாணவர்கள் பங்கேற்கும் விதமாக ஓவியப் போட்டி, வண்ணம் தீட்டும் போட்டி, அறிவுப்புதிர் போட்டி போன்ற பல சிறப்பு அங்கங்கள் கண்காட்சிக் கூடத்தில் இடம்பெற உள்ளன. இதில் பாலர்பள்ளி, தொடக்கப்பள்ளி மாணவர்கள் இலவசமாக பங்குபெற வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
குழந்தை இலக்கியக் கலை விழா 9 ஜூன் 2018 (இரவு 7.30 முதல் நண்பகல் 10வரை)
மாநாட்டை ஒட்டி மாணவர்களைக் கொண்டே நடத்தப்படும் கலை விழா மிக முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது. ஜூன் 9, 2018 (சனிக்கிழமை) மலாயாப் பல்கலைக் கழக இஸ்லாமிய கல்வி ஆய்வகக் கலை அரங்கில் (Auditorium Akademi Pengajian Islam, UM) 7.30க்குத் தொடங்கும் இந்நிகழ்ச்சி குழந்தைகளுக்குக் கலைநிகழ்ச்சி எப்படி படைக்கப்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமையும்.

இதில் வழக்கற்றுப் போய்விட்ட கவிதை நாடகம், குழந்தைகளுக்கான இசை நாடகம், மாணவர்கள் கவியரங்கம் என மனத்தை ஈர்க்கும் இசைப் பின்னணியோடும் கண்ணைக் கவரும் காட்சி அமைப்போடும் மனத்தில் பதியும் கருத்து வளத்தோடும் அரங்கேறும்.
மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளைச் சார்ந்த குழந்தைக் கவிஞர்களின் பாடல்கள் தனிப்பாடல்களாகவும் நடனப்பாடல்களாகவும் நடிப்புப் பாடல்களாகவும் இடம்பெற உள்ளன. இந்நிகழ்வின் தொடக்க அங்கத்தில் புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் டி.எல். மகராஜன் அவர்கள் காட்சித்திரை பின்னணியோடு மாநாட்டுக் கோட்பாட்டு பாடலைப் பாடுவார்.
தொடக்கம் முதல் இறுதிவரை கலைவிழா நிரலை மாணவர்களே நடத்துகின்றனர். இந்த அரியதோர் இலக்கியக் கலை விழாவில் அனைவரும் வந்து பங்குபெற ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
மேல் விவரங்களுக்கு முனைவர் முரசு. நெடுமாறன் (012-9117855), திரு. மன்னர் மன்னன் மருதை (013-341 7389) ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.